×

நல்லூர் ஊராட்சியில் மழைநீர் கால்வாயில் ஆபத்தான பள்ளம்

புழல், அக். 2:  நல்லூர் ஊராட்சி பகுதியில் உபரி நீர் கால்வாயின் உடைந்த சிமென்ட் சிலாப்பை சீர்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைதுள்ளனர்.  சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலமரம் பகுதியில் நூலக கட்டிடம் உள்ளது. இங்குதான் முதியோர், விதவைகள் ஆகியோருக்கு மாதம்தோறும் உதவித் தொகைகள் வழங்கப்படுகிறது. இதனருகே பம்மதுகுளம் பகுதியில்  இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி வரை மழைநீர் கால்வாய் கட்டி சிமென்ட் சிலாப் போடப்பட்டுள்ளது.  சரியாக பராமரிப்பு இல்லாததால் இந்த கால்வாயின் சிமென்ட் மூடிகள் ஆங்காங்கே கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டுள்ளது.  இதனால் விபத்து அபாயம் உள்ளது. அதுமட்டுமன்றி குப்பை கழிவுகளும் போடப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.  

குறிப்பாக, நூலகம் அருகே கால்வாயில் பெரியதாக உடைப்பு ஏற்பட்டுள்ளதால் இதை தாண்டி செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இந்த பகுதியை கடக்க முயலும் முதியவர்கள் பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். இவற்றை சரி செய்யக்கோரி நல்லூர் ஊராட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தும்  நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மழைநீர் கால்வாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : rainwater canal ,panchayat ,Nallur ,
× RELATED நத்தத்தில் குண்டும், குழியுமான சாலையால் ஓட்டுனர்கள் அவதி