×

வெங்கல் குப்பம் கிராமத்தில் இடிந்து விழும் ஆபத்தில் பயணிகள் நிழற்குடை

ஊத்துக்கோட்டை, அக்.2:  வெங்கல்குப்பம்  கிராமத்தில்  செடி, கொடிகள் படர்ந்து பழுதடைந்து கிடக்கும் பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடை  மற்றும் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை    அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்  என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் வெங்கல் குப்பம்   கிராமம் உள்ளது. இங்கு அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள் என  3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராமத்தின் மைய பகுதியில் கடந்த 40 வருடத்திற்கு முன்பு  பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடை மற்றும் இதன் அருகில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி  கட்டப்பட்டது. அங்கிருந்து காவனூர் பகுதியை சேர்ந்த அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆகியோர்  கன்னிகைப்பேர்,  பெரியபாளையம், திருவள்ளூர்  போன்ற பகுதிகளுக்குச் சென்று வந்தனர்.

தற்போது இந்த பயணிகள் நிழற்குடை  செடி, கொடிகள் படர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதே போல் குடிநீர் தொட்டியும் பயன்பாடில்லாமல் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிறுத்த பயணிகள்  நிழற்குடையையும், குடிநீர் தொட்டியையும் புதிதாக அமைக்க வேண்டும்  என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது  :  40 வருடங்களுக்கு முன்பு  பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடையும் மும்,  இதனருகில் குடிநீர்தொட்டியும் கட்டப்பட்டுள்ளது.   இதில்  தற்போது  செடி, கொடிகள் படர்ந்து பயணிகள் நிழற்குடையின் கம்பிகள் வெளியே தெரிந்து ஆபத்தான  நிலையில் உள்ளது. இது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள்  பயணிகள் நிழற்குடையையும், பழைய குடிநீர் தொட்டியையும் இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தரவேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags : Travelers ,village ,Venkal Kuppam ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...