×

பென்னலூர்பேட்டையில் டாஸ்மாக் கடை திறந்தால் போராட்டம்

ஊத்துக்கோட்டை, அக். 2:  பென்னலூர்பேட்டையில் டாஸ்மாக்கடை திறந்தால் போராட்டம் நடத்தப்படும் என்று கிராம மக்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே பென்னலூர்பேட்டையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள், ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு படிக்கவும் வேலை விஷயமாகவும்  சென்று வருகின்றனர். இந்த நிலையில், பென்னலூர்பேட்டையில் டாஸ்மாக் கடை திறக்கப்போவதாக தகவல் பரவியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் வக்கீல்கள் பாஸ்கர், மகேந்திரன் ஆகியோர் தலைமையில் கிராம மக்கள் திருவள்ளூர்  கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
பென்னூர்பேட்டை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்போவதாக தகவல் வந்துள்ளது. அப்படி மது கடை திறந்தால் பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள்  பாதிக்கப்படுவார்கள். சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும். குடிமகன்களால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பென்னலூர்பேட்டையில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர், முதன்மைச் செயலாளர் மற்றும் திருவள்ளூர் போலீஸ் எஸ்.பி, ஊத்துக்கோட்டை தாசில்தார், துணை கண்காணிப்பாளர், பென்னலூர்பேட்டை காவல் நிலைய போலீசார் ஆகியோருக்கும் மனுவின் நகலை  அனுப்பியுள்ளனர். இதை மீறி, டாஸ்மாக் கடை திறக்க அனுமதி அளித்தால் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.

Tags : task shop ,
× RELATED டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின்...