×

அம்பத்தூர் மண்டலத்தில் உபகரணங்கள் வழங்காததை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்: வருகை பதிவேட்டில் முறைகேடு என குற்றச்சாட்டு

அம்பத்தூர்: அம்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட 15 வார்டுகளில் சுமார் 10,000 டன் குப்பை மாதந்தோறும் சேர்கிறது. இந்த குப்பையை 1400 துப்புரவு தொழிலாளர்கள் அகற்றி வருகின்றனர். மேற்கண்ட துப்புரவு தொழிலாளர்களுக்கு  கடந்த சில மாதமாக குப்பைகளை அகற்றுவதற்கு உபகரணங்கள் சரிவர  வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை துப்புரவு தொழிலாளர்கள் மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்தும்  நடவடிக்கை இல்லை. இதனால், துப்புரவு ஊழியர்கள் குப்பை அகற்றும் பணிகளை சரிவர செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். மேலும், அவர்கள் நோய் தொற்றாலும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, நேற்று முன்தினம் மாலை அம்பத்தூர் மண்டல செங்கொடி சங்கம் சார்பில் 500க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் அம்பத்தூர் மண்டல அலுவலகத்தை  முற்றுகையிட்டனர். பின்னர், அவர்கள் துப்புரவு பணிகளை மேற்கொள்ள உபகரணங்களை வழங்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்.

பின்னர், மண்டல அதிகாரி தமிழ்ச்செல்வனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இந்த போராட்டத்தில் மண்டல செயலாளர் குப்புசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் சீனிவாசலு, மாவட்ட துணை தலைவர் மணிமேகலை உள்பட நிர்வாகிகள்  பங்கேற்றனர்.
இதுகுறித்து துப்புரவு ஊழியர்கள் கூறுகையில், அம்பத்தூர் மண்டலத்தில் பணியாற்றும் 1,400க்கும் மேற்பட்ட துப்புரவு ஊழியர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக துடைப்பம், அன்னக்கூடை, கைஉறை, முகத்திரை, கட்ட பிரஸ் உள்ளிட்ட  உபகரணங்கள் வழங்கப்படவில்லை.  மேலும், குறிப்பிட்ட தேதியில் மாத சம்பளம் வழங்குவதில்லை.  மாத சம்பளம் வங்கி மூலம் வழங்கப்படாமல், துப்புரவு ஆய்வாளர்கள் மூலம் வழங்கப்படுகிறது. அப்போது, அவர்கள் ஊழியர்களின் வேலை நாட்கள் குறைத்து சம்பளத்தை  வழங்குகின்றனர்.

இதன் மூலம், ஆய்வாளர்கள் வருகைப்பதிவேடு மூலம் சம்பள பணத்தில்  ஊழல் செய்கின்றனர். இதுகுறித்து கேட்டால் வேலையில் இருந்து நீக்குவோம் என்று மிரட்டுகின்றனர். மேலும், மண்டல செயற்பொறியாளர் ஒருவர் முகப்பேர் பகுதியில்  பணியாற்றும் ஊழியர்களை உபகரணங்கள் இல்லாவிட்டாலும் துப்புரவு பணிகளை செய்யவேண்டும். இல்லாவிட்டால், ஊழியர்களுக்கு விடுப்பு நாளாக அறிவிப்பேன் என மிரட்டி வருகிறார். எங்களது  கோரிக்கைகளை மாநகராட்சி ஆணையாளர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், துப்புரவு பணிகள் பாதிக்கப்படும்.  மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்,’’ என்றனர். 

Tags : Sanitation workers ,zone ,Ambattur ,
× RELATED சுட்டெரிக்கும் வெயிலையும்...