×

ரியாத்தில் இருந்து சென்னைக்கு கடத்திய 21.5 லட்சம் தங்கம் பறிமுதல்: ஆந்திர வாலிபர் பிடிபட்டார்

சென்னை: ரியாத்தில் இருந்து முறுக்கு மாவு பிழியும் கருவிக்குள் 21.5 லட்சம் மதிப்புடைய தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்த ஆந்திர வாலிபர் சிக்கினார். அவரை கைது செய்த சுங்க அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரியாத், மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 5.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சதாம் உசேன் (25) சுற்றுலா பயணி விசாவில் ரியாத்திற்கு சென்று, சென்னை திரும்பினார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடமைகளை சோதனையிட்டபோது பையில் முறுக்கு பிழியும் கருவி ஒன்று இருந்தது.

அதை சுங்க அதிகாரிகள் எடுத்து பார்த்தனர். அது வழக்கத்தை விட அதிக கனமாக இருந்தது. உடனே அதை கழற்றி பார்க்க முயன்றனர். அதற்கு சதாம் உசேன் எதிர்ப்பு தெரிவித்தார். ‘‘அதற்குள் முறுக்கு மாவு இருக்கிறது. அதை கழற்றினால் மாவு கெட்டுப் போய்விடும். எனவே கழற்றக்கூடாது’’ என்றார்.  ஆனாலும், அதிகாரிகள் அதை கழற்றி முறுக்கு மாவை எடுத்து கிளறி பார்த்தபோது அதில் 6 தங்க பிஸ்கட்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதன் எடை 555 கிராம். இதன் மதிப்பு ₹21.5 லட்சம்.
இதையடுத்து சுங்க அதிகாரிகள் தங்க பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்ததோடு, சதாம் உசேனை கைது செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Tags : Riyadh ,Chennai ,
× RELATED துபாயைத் தொடர்ந்து சவுதி அரேபியாவிலும் கன மழை!