×

தூங்கியபோது முகத்தில் வெந்நீர் ஊற்றி கட்டையால் அடித்து மாமியார் படுகொலை: காஞ்சிபுரம் மருமகள் வெறிச்செயல்

சென்னை: செய்யாறு அருகே குடும்ப தகராறு காரணமாக நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மாமியார் மீது வெந்நீரை ஊற்றி, விறகுகட்டையால் அடித்து கொலை செய்த, காஞ்சிபுரத்தை சேர்ந்த மருமகளை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா, அரசாணைபாளையம் ஊராட்சிக்குட்பட்ட சித்தாலபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி முனியம்மாள்(55). இவர்களது மகன் வெங்கடேசன். இவர் கல்குவாரியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜோதி(35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தந்தை இறந்த பிறகு வெங்கடேசன் அதேபகுதியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசிக்கிறார். முனியம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார்.  திருமணம் ஆன சில நாட்களில் இருந்தே மருமகள் ஜோதிக்கும், மாமியார் முனியம்மாளுக்கும்  அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதுதொடர்பாக இருவரும் அவ்வப்போது தூசி போலீசில் புகார் செய்து உள்ளனர். அவர்களை, போலீசார் சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர்.

எனினும் தொடர்ந்து தகராறு நடந்து வந்ததாம். இந்நிலையில், கடந்த 29ம் தேதி விவசாய நிலத்தில் மாடு கட்டுவது தொடர்பாக முனியம்மாளுக்கும், ஜோதிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது நேற்று முன்தினமும் நீடித்தது. அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள், அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில், அன்று இரவு வெங்கடேசன் மற்றும் குழந்தைகளுடன் சாப்பிட்டுவிட்டு தூங்கினர். ஆனால், ஜோதி மட்டும் தூங்காமல் மாமியார் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். நள்ளிரவு 12.30 மணியளவில் வீட்டில் வெந்நீர் வைத்து எடுத்துக்கொண்டு மாமியார் முனியம்மாள் வீட்டிற்கு சென்றார்.  அங்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த முனியம்மாள் முகத்தில் வெந்நீரை ஊற்றினாராம். இதனால், அவர் வலியால் அலறி துடித்தார். உடனே ஜோதி, அங்கிருந்த விறகு கட்டையால் முனியம்மாளின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் முனியம்மாள் அங்கேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னர், அங்கிருந்து வெளியே வந்த ஜோதி, அவ்வழியாக கல் குவாரியில் இருந்து வந்த ஒரு லாரியில் ஏறி தனது தாய் வீடான காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே உள்ள கம்மராஜபுரத்திற்கு சென்றுவிட்டார்.
இதற்கிடையில் முனியம்மாள் கொலை குறித்து அக்கம்பக்கத்தினர் தூசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் நேற்று அதிகாலை 1 மணியளவில் அங்கு சென்று முனியம்மாளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து தாய் வீட்டில் பதுங்கியிருந்த ஜோதியை உடனடியாக கைது செய்தனர். குடும்ப தகராறில் மாமியார் முகத்தில் மருமகள் வெந்நீர் ஊற்றி, விறகு கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Tags : Mother-in-law massacre ,Kanchipuram ,
× RELATED குளிர்ந்தது காஞ்சிபுரம் இடி மின்னலுடன் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி