×

மாநகராட்சி வணிக வளாக கடைகளில் ரூ.35 லட்சம் வாடகை பாக்கி 204 கடைகளுக்கு நோட்டீஸ்

ஈரோடு, அக். 2: ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் பஸ் ஸ்டாண்ட், ஆர்கேவி ரோடு, காவிரி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள் உள்ளது. இந்த வணிக வளாகங்கள் ஒவ்வொரு பகுதிக்கு தகுந்தாற்போல ஏலம் விடப்பட்டு வருகிறது. இதற்கான வாடகையை நிர்ணயம செய்து மாநகராட்சி ஏலத்தை நடத்தி வருகிறது.  கடைகளை வாடகைக்கு எடுப்பவர்கள் நீண்ட காலமாக வாடகையை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். மாநகராட்சி சார்பில் வாடகை பாக்கி தொடர்பாக பட்டியல் தயாரிக்கப்பட்டு கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், பல மாதமாக வாடகை பாக்கி தொகையை செலுத்தாமல் உள்ளனர். சுமார் 204 கடைகளுக்கு 35 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியாக உள்ளது.இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் கடைக்காரர்கள் கண்டுகொள்வதில்லை. வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்து சீல் வைக்க மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, நேற்று உதவி ஆணையர் (வருவாய்) குமரேசன் தலைமையில் உதவி வருவாய் அலுவலர் வசந்தி, எழுத்தர் நாகராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் பஸ் ஸ்டாண்டில் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சென்று அங்கு எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினர்.  மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட வணிக வளாக கடைகளை பொது ஏலம் மூலமாக குத்தகைக்கு விடப்பட்டு வருகிறது. இந்த கடைகளை குத்தகைக்கு எடுக்கும் ஏலதாரர்கள் உரிய வாடகையை செலுத்தாமல் பல மாதமாக நிலுவை வைத்துள்ளனர். தற்போது, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வாடகையை வசூலிக்கும் வகையில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் பெற்ற 3 நாட்களுக்குள் பணத்தை செலுத்தவில்லையென்றால் கடையை பூட்டி சீல் வைக்கவும், உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Tags : shops ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி