×

ரூ.45.51 கோடியில் 9 இடங்களில் பதப்படுத்தும் மையங்கள்

ஊட்டி, அக். 2: நீலகிரி  மாவட்டத்தில் ரூ.45.51 கோடி மதிப்பீட்டில் காய்கறிகள் பாதுகாப்பாக வைக்க  ஏற்படுத்தப்பட்டுள்ள முதன்மை பதப்படுத்தும் மையங்களை விவசாயிகள்  பயன்படுத்தி  கொள்ளலாம். தமிழ்நாடு அரசு வேளாண்மை விற்பனை  மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் விவசாயிகளும் விற்பனை வாய்ப்பில்  சிறந்து விளங்கச் செய்யும் வகையில் தமிழ்நாடு விநிேயாகத் தொடர் மேலாண்மை  திட்டம் நீலகிரி மாவட்டத்தில் 9 இடங்களில் ரூ.45.51 கோடி செலவில்  செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஊட்டி வட்டாரத்தில் ஒசஹட்டி,  தாவணெ, அணிக்கொரை ஆகிய இடங்களிலும், குன்னூர் வட்டாரத்தில் நியூ அல்லஞ்சி,  கோத்தகிரி வட்டாரத்தில் சுள்ளிகூடு ஆகிய இடங்களிலும் கேரட்,  பீட்ரூட், முள்ளங்கி போன்ற வேர் காய்கறிகளுக்கான முதன்மை பதப்படுத்தும்  மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கூடலூர் வட்டாரத்தில் உப்பட்டி,  அய்யன்கொல்லி ஆகிய இடங்களில் வாழைக்கான பதப்படுத்தும் மையங்கள்  அமைக்கப்பட்டு உள்ளன. கோத்தகிரியில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க  வளாகத்தில் சைனீஸ் காய்கறிகளுக்கான பதப்படுத்தும் மையம்  அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் ரோஜா பூங்கா வளாகத்தில் 500 மெட்ரிக் டன்  கொள்ளளவு உள்ள குளிர் பதன கிடங்கும் உள்ளது.

முதன்மை பதப்படுத்தும்  மையங்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி  ஆணை வழங்கப்பட்டது. இந்நிலையில் ஊட்டி தமிழகம் மாளிகையில் நடந்த  நிகழ்ச்சியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் சிரு  முன்னிலையில் நீலகிரி மாவட்ட விற்பனை குழு, நீலகிரி உருளைகிழங்கு மற்றும்  காய்கறிகள் சங்கம், சோலாடா காய்கறிகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்,  நீலகிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், அகிம்சா ஆர்கானிக் தேயிலை  உற்பத்தியாளர் நிறுவனம் ஆகியோர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்  செய்யப்பட்டது. தொடர்ந்து ஒசஹட்டியில் உள்ள முதன்மை பதப்படுத்தும் மையம்  துவக்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக  துவக்கி வைக்கப்பட்ட முதன்மை பதப்படுத்தும் மையம் ஆகும். இந்நிகழ்ச்சியில்  தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் உட்பட பலர் கலந்து  கொண்டனர். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் முதன்மை பதப்படுத்தும்  மையங்களில் தங்கள் விளைப் பொருட்களை பதப்படுத்தி இடை தரகர்கள் இன்றி வேளாண்  சந்தையில் தங்கள் விளை பொருட்களை நல்ல விலைக்கு விற்பனை செய்து  பயன்பெறலாம், என தோட்டக்கலைத்துறை கேட்டு கொண்டுள்ளது.

Tags : Processing centers ,locations ,
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு