×

தீபாவளியை குறிவைத்து பயணிகளிடம் திருடும் கும்பலை சேர்ந்த பெண் கைது

கோவை, அக்.2: தீபாவளி பண்டிகை நெருங்குவதை தொடர்ந்து வழிப்பறி மற்றும் பஸ்களில் ஜேப்படி போன்ற குற்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற வாய்ப்பிருக்கிறது.  இதனை தடுக்க கோவை மாநகர போலீசார் தனிப்படை அமைத்தும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன் தினம் மேட்டுப்பாளையம் கோட்டைபுதூரை சேர்ந்த பாலதண்டபாணி என்பவரின் மனைவி புவனேஸ்வரி (42), மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை பூமார்க்கெட்டிற்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். வழியில் சாய்பாபா காலனியில் இறங்கி உறவினர் ஒருவரை பார்த்துவிட்டு மீண்டும் அங்கிருந்து டவுன்ஹால் வருவதற்காக 4ம் நெம்பர் பஸ்சில் ஏறி பயணம் செய்தார். அப்போது டிப்டாப் உடை அணிந்த பெண் ஒருவர் இவரை நெருங்கி வந்து, கையில் மறைத்து வைத்திருந்த பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சிறிய அளவிலான கட்டிங் பிளேடு கொண்டு புவனேஸ்வரி அணிந்திருந்த 3.5 பவுன் செயினை துண்டித்து எடுத்தார். இதைப்பார்த்து, புவனேஸ்வரி கூச்சல் போட்டார். இதனையடுத்து சக பயணிகளின் உதவியிடன் அவரை பிடித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர், மதுரை வண்டியூரை சேர்ந்த ரமேஷ் மனைவி கவிதா(40) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில்:- எனது முதல் கணவர் பிரிந்து சென்று விட்டார். தற்போது 2வது கணவருடன் வாழ்ந்து வருகிறேன். ஒரு மகன் உள்ளார். தீபாவளி பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் மற்ற பெண்களுடன் வெளியூர் வந்து நகை, பணம் திருட்டில் ஈடுபடுவது வழக்கம். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டதால் சென்னை, கோவை, திருப்பூர் செல்ல திட்டமிட்டு, முதல் கட்டமாக கோவையில் திருடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு மற்றொரு பெண்ணுடன் கோவை வந்தேன். 10 நாட்கள் தங்கியிருந்து திருட்டில் ஈடுபட முடிவு செய்து, வீட்டில் இருந்து டிப்டாப் உடைகளை எடுத்து வந்துள்ளோம்.

இரவு நேரத்தில் சூலூர், துடியலூர் சந்தைகளில் தங்கியிருந்து அதிகாலை எழுந்து அங்குள்ள பாத்ரூமில் குளித்து விட்டு கூட்டம் நிரம்பி வழியும் பஸ்களில் நகை பறிப்பில் ஈடுபடுவது வழக்கம். நகைகளை திருடியவுடன் கணவருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து உடனுக்குடன் அதை கைமாற்றி விடுவோம். இந்த முறை நேற்று முன் தினம்தான் நகை திருட்டில் இறங்கினோம். காலையில் 7ம் நெம்பர் பஸ்சில் ஏறி, இளம்பெண் ஒருவரிடம் 1.5 பவுன் செயினை திருடினேன். 2வதாக 4ம் நெம்பர் பஸ்சில் திருடும்போது போலீசில் சிக்கிக்கொண்டேன்.


இவ்வாறு கவிதா வாக்குமூலம் கொடுத்தார். அவரிடம் இருந்து 5 பவுன் நகை மீட்கப்பட்டது. இவரிடம் நகையை பறிகொடுத்த மற்றொரு பெண் சேலம் மாவட்டம், ஆத்தூர் பக்கமுள்ள பெரியேறியை சேர்ந்த சக்திவேல் மகள் தாமரைச்செல்வி (27), இவர், கோவை சரவணம்பட்டியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருவது தெரியவந்தது. கவிதாவுடன் தீபாவளி திருட்டுக்காக கோவை வந்துள்ள மற்றொரு பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : passengers ,Diwali ,
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...