×

ஜீவா நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க அவகாசம் மாநகராட்சி அதிகாரிகள் பாதியில் திரும்பினர்

கோவை, அக். 2:  கோவை மேட்டுப்பாளையம் ரோடு எருக்கம்பெனி ஜீவாநகரில் 100க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க சென்ற மாநகராட்சி அதிகாரிகளிடம் கோவை எம்.பி. நடராஜன் மற்றும் பொதுமக்கள் அவகாசம் கேட்டதை தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. கோவை மேட்டுப்பாளையம் ரோடு எருக்கம்பெனி ஜீவா நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான 60 அடி ரோட்டில் கடந்த 40 ஆண்டுக்கும் மேலாக 252 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. இந்த வீடுகளுக்கு மின் இணைப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இங்கு வசிப்போருக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் கீரணத்தம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு, அங்கு வீடும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், இந்த பகுதி மக்கள் அங்கு செல்ல மறுத்து, தொடர்ந்து இங்கேயே குடியிருந்து வந்தனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகள் 90 வீடுகளை இடித்து அப்புறப்படுத்தினர். மீதமுள்ள வீடுகளையும் இடிக்க திட்டமிட்ட போது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் வசிப்பவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் துணையுடன் நேற்று ஜீவா நகர் சென்றனர். வீடுகளை அகற்ற அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் மற்றும் ஜீவா நகர் பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வரும் 4ம் ேததி வரை வீடுகளை இடிக்க அவகாசம் கேட்டனர். இதை ஏற்ற மாநகராட்சி அதிகாரிகள் 4ம் தேதி வரை அவகாசம் அளித்து திரும்பி சென்றனர்.

Tags : Jiwa ,homes ,
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை