×

சத்தியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதம்

சத்தியமங்கலம், அக்.2:  சத்தியமங்கலத்தில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் பலத்த சூறாவளிக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. சத்தியமங்கலம், பவானிசாகர், பண்ணாரி, சிக்கரசம்பாளையம், பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்ய துவங்கிய மழை, சுமார் ஒருமணி நேரம் கொட்டித்தீர்த்தது. மழையின்போது பலத்த சூறாவளிக்காற்று வீசியது. இதனால், சத்தியமங்கலம் வரதம்பாளையம் பகுதியில் உள்ள விவசாயி லிங்கேஷ் என்பவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட நேந்திரன் ரக வாழைகள் முறிந்து விழுந்தன. இதேபோல், விவசாயி மணி என்பவரது தோட்டத்தில் 500 வாழை மரங்களும், செல்வராஜ் என்பவரது தோட்டத்தில் 1000 வாழை மரங்களும், விவசாயி சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் 1000 வாழை மரங்களும் என பெரியகுளம் மற்றும் வரதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானது.

அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளதால் சுமார் ரூ.25 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதேபோல், இந்த பகுதியில் 3 தென்னை மரங்கள், வேப்பமரங்களும் காற்றின் வேகம் தாங்காமல் முறிந்து விழுந்தன. சூறாவளிக்காற்றில் முறிந்து விழுந்து சேதமடைந்த வாழை மரங்களை, வருவாய்த்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வாழை மரங்களுக்கு தனிநபர் காப்பீடு போல் புதிய காப்பீட்டு திட்டம் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...