×

கனரக வாகனங்கள் அதிவேகமாக இயக்குவதை தடுக்க சோதனைச்சாவடி அமைக்க வேண்டும் அரியலூர் எஸ்பி உத்தரவு

அரியலூர், அக். 2: அரியலூர் மாவட்டத்தில் கனரக வாகனங்கள் வேகமாக செல்வதை தடுக்க ஆங்காங்கே சோதனைச்சாவடி அமைக்க வேண்டுமென சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் எஸ்பி னிவாசன் பேசினார்.அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. எஸ்பி னிவாசன் தலைமை வகித்து பேசுகையில், அனைத்து சிமென்ட் தொழிற்சாலை கனரக வாகனங்கள் மூலம் விபத்து நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கனரக வாகனங்களும் அதிவேகமாக இயக்குவதையும், ஓட்டுனர் உரிமமின்றி வாகனம் இயக்குபவர்களை தடுக்கும் விதமாக சோதனைச்சாவடி அமைக்க வேண்டும். தங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில் விபத்துகள் நடைபெறாமல் இருக்க கூடுதலாக தடுப்பு அரண்கள் அமைக்க வேண்டும். சாலையோரங்களில் கனரக வாகனங்களை நிறுத்தி வைப்பதை தவிர்க்க வேண்டும். அனைத்து சிமென்ட் ஆலையில் லாரியின் பின்புறம் எதிரொலிக்கும் ஸ்டிக்கர் நன்கு தெரியுமாறு சுத்தம் செய்து வாகனத்தை இயக்க வேண்டும்.கனரக வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரும்போது குறிப்பிட்ட இடைவெளி விட்டு தான் பின்தொடர வேண்டும். அனைத்து சிமென்ட் ஆலை நிறுவனங்களின் வாகன ஓட்டிகள் அலைபேசியில் பேசி கொண்டு வாகனத்தை இயக்கக்கூடாது. குறிப்பிட்ட வேகத்துக்குமேல் வாகனத்தை ஓட்டக்கூடாது. மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்க கூடாது. கட்டாயம் முறையான சீருடை அணிந்து தான் வாகனத்தை இயக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளைநிற வண்ணம் பூச வேண்டும். வி.கைகாட்டி மற்றும் செந்துறை பகுதிகளில் சிமென்ட் ஆலை நிறுவனம் மற்றும் ரெட்கிராஸ் சார்பில் அவசர ஊர்தி நிறுவ வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஜெயங்கொண்டம் அரசு பள்ளி முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும். விபத்து ஏற்படும் இடங்களில் உடனடியாக சென்று அந்த இடத்தை பார்வையிட்டு விபத்து மேலும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிகார்டு மற்றும் எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும். விபத்து ஏற்படாமல் இருக்க காவல்துறை சார்பிலும் சிமென்டு அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் 108 அலுவலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெரியய்யா, ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் மணவாளன், ஆர்டிஓ வெங்கடேசன், போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணன், சிமென்ட் தொழிற்சாலை அலுவலர்கள், நெடுஞ்சாலை துறையினர், அவசர ஊர்தி 108 அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Ariyalur SP ,
× RELATED வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3ம் கட்ட...