×

கரூர் மாவட்டத்தில் 17வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி அக். 14ல் துவக்கம்

கரூர், அக். 2: கோமாரி நோய் தடுப்பு திட்டம் 17வது சுற்று நடத்தப்படுவது குறித்து கலெக்டர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழகத்தில் 32 மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் குக்கிராமங்களில் தேசிய கோமாரி நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை 16 சுற்று தடுப்பூசி பணி முடிவடைந்துள்ளது. 2019 அக்டோபர் 14ம் தேதி முதல் நவம்பர் 12ம் தேதி வரை 17வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி கரூர் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் உள்ள 1 லட்சத்து 90 ஆயிரம் எண்ணிக்கை பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கும் போடப்படவுள்ளது.இந்த பணி சிறப்பாக நடைபெறும் வகையில், நோய்க்கான ஊநீர் அதற்கென உருவாக்கப்பட்ட குளிரூட்டும் அறையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து ஒவ்வொரு கிராமத்திற்கும் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட நாளில் இந்த தடுப்பூசி பணிக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி குழுவினர் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் தற்போது உள்ள உள்ள அனைத்து பசுவினம், எருமையினங்களை கணக்கிட்டு, அவையனைத்திற்கும் தடுப்பூசி போடப்படவுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 100 சதவீதம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இது தொடர்பாக கிராமப்புற விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து கிராமங்களிலும் அக்டோபர் 2ம் தேதி அன்று நடைபெறவுள்ள கிராம சபா கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் பங்கேற்று கால்நடை மருத்துவர்கள் கூறும் அறிவுரையின்படி கால்நடைகளை குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.கோமாரி நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போர்களுக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும், கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைவு மற்றும் எருதுகளின் வேலைத்திறன் குறைவு, கறவை மாடுகளின் சினைப்பிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகளின் இறப்பு போன்ற பாதிப்புகளால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

மேலும் இந்த நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலங்களில் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வருதல், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. மேலும் இந்த நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் உமிழ்நீர் மூலம் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.எனவே கரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் மூன்று மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு அக்டோபர் 14ம் தேதி முதல் நவம்பர் 12ம் தேதி வரை ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் தங்களது கால்நடைகளுக்கு (கோமாரி நோய்) தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Circuit Blood Vaccination Task Force ,Karur District Start ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு