×

திருச்சி புறவழி சாலையில் குளித்தலை புதிய பஸ் நிலையம் அமைக்க தேர்வு செய்த இடம் மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு

குளித்தலை, அக். 2: திருச்சி புறவழி சாலையில் குளித்தலை புதிய பஸ் நிலையம் அமைக்க தேர்வு செய்த இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 25 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை நிரந்தரமான பேருந்து நிலையம் என்பது பகல் கனவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த பல வருடங்களுக்கு முன்பு குளித்தலை சுங்க கேட் முசிறி பாலம் பெட்ரோல் பங்க் அருகே திருச்சி கரூர் புறவழிச்சாலையில் பேருந்து நிலையத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது.அதற்கு அனைத்து கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் குளித்தலை அருகே உள்ள தோகமலை ஊராட்சி பகுதியாக இருந்தாலும் சிறிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருச்சி மாவட்டம் முசிறி பேரூராட்சியில் பேருந்து நிலையம் உள்ளது. அருகே உள்ள சிறுகமணி பேரூராட்சியில் ் பேருந்து நிலையம் உள்ளது.ஆனால் குளித்தலை மக்கள் 50 ஆண்டு காலமாக எதிர்பார்க்கும் பஸ் நிலையம் மட்டும் ஏன் வர தாமதம் ஆகிறது என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது. கடந்த 50 ஆண்டு காலமாக எத்தனையோ ஆட்சியாளர்கள் வந்து சென்றாலும் பஸ் நிலைய பிரச்னைகள் மட்டும் அக்கறை காட்டாமல் நழுவி விட காரணம் புரியாத புதிராக உள்ளது என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி திடீரென தமிழக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குளித்தலை பேருந்து நிலையத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்ட சுங்க கேட் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள இடத்தை பார்வையிட வருகிறார் என தகவல் வந்ததன் பேரில் அனைத்து துறை அதிகாரிகளும், பொதுமக்களும் ஆர்வத்துடன் நீண்ட நேரம் காத்திருந்தனர். அப்போது பொதுமக்கள் இன்றாவது குளித்தலை நகராட்சிக்கு விடிவுகாலம் பிறந்துவிடும் என நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் அமைச்சர் வராததால் அந்த நம்பிக்கையும் ஏமாற்றத்தில் முடிந்தது என புலம்பியவாறே சென்றனர்.

இந்நிலையில் நேற்று காலை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் கரூர் திருச்சி புறவழிச்சாலையில் மேம்பாலம் அருகே புதிய பஸ் நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தினை ஆய்வு செய்ய வந்தார். அவரிடம் கேட்டபோது பஸ் நிலையம் அமைக்க அரசுக்கு திட்டம் அனுப்பி வைக்கப்பட்டது.அதன்படி இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான நிலத்தினை மதிப்பீடு செய்து அதற்கான அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார். வட்டாட்சியர் மகாமுனி, நகராட்சி ஆணையர்(பொறுப்பு) புகழேந்தி, கடம்பர் கோவில் செயல் அலுவலர்(ஆட்சி) சிவப்பிரகாசம் உள்பட துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


Tags : District Revenue Officer ,location ,Trichy ,bus station ,
× RELATED நந்தியம்பாக்கம் ஊராட்சியில் தண்ணீர்...