×

வக்பு வாரியம் அமைக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

காரைக்கால், அக். 2: காரைக்கால் நகர முத்தவல்லிகள், அனைத்து பள்ளி ஜமாஅத்தார்கள், ஆலிம்கள், சமுதாய அமைப்புகள், இஸ்லாமிய சங்கங்கள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளடக்கிய,  காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத்தின் செயற்குழு கூட்டம் காரைக்காலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் முஹம்மது யாசின் தலைமை தாங்கினார்.  துணை ஒருங்கிணைப்பாளர் அபுல் அமீன் வரவேற்றார். புதுச்சேரி வக்பு நிர்வாகம் சிறப்பாக செயல்பட, வக்பு வாரியத்திற்கு தலைவர் மிக முக்கியம். ஆனால் புதுச்சேரியில் வக்பு வாரிய தலைவர் நியமிக்கப்படாமல் இருப்பது சிறுபான்மை சமூகமான இஸ்லாமியர்களுக்கு வேதனையும், வருத்தமும் அளிக்கிறது. வக்பு வாரியத்திற்கு தலைவர் நியமிக்கப்படாத காரணத்தால், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பல்வேறு வக்பு சொத்துக்கள் அபகரிக்கப்படுவதும், வக்பு நிர்வாகத்திற்கு வரவேண்டிய தொகைகள் வராமல் இருப்பதும், மேலும், காஜியார்கள் நியமனம் மற்றும் முத்தவல்லிகள் நியமனம் செய்வதிலும் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

எனவே, இனியும் காலந்தாழ்த்தாமல் புதுச்சேரி வக்பு வாரியத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். அதுபோல் புதுச்சேரி ஹஜ் கமிட்டிக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்காத காரணத்தால், பல்வேறு சலுகைகளை பெறம்டியாமல் போகிறது. எனவே ஹஜ் கமிட்டியை உடனே அமைக்க வேண்டும். இஸ்லாத்தில் ஜாதிகள் என்பது கிடையாது என்ற நிலையிலும், அரசின் வசதிக்காக இஸ்லாத்தில் உட்பிரிவுகளை கொண்டுவந்து அதனடிப்படையில் இஸ்லாமியர்கள் என்பதற்கான சான்றிதழை மற்ற மதத்தினருக்கு வழங்குவதுபோல் ஜாதி சான்றிதழாக வழங்கி வருகிறது.

ஆனால், கணவனால் கைவிடப்பட்டவர், கணவர் எங்கிருக்கிறார் எனபதயே தெரியாதவர், கணவரை விட்டு பிரிந்தவர், கணவர் இறந்து பல வருடங்கள் கடந்தவர் என்ற நிலையில் உள்ள பெண்மணியின் குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் கோரும்போது அந்த பெண்மணியின் கணவரின் ஜாதிக்கான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே ஜாதி சான்றிதழ் வழங்கமுடியும் என தாலுகா அலுவலகத்தில் கூறி அந்த சிறுவர்களையும், அந்த பெண்மணிகளையும் அலைக்கழித்து வருகின்றனர். இதுபோல் கணவரை இழந்த பெண்களின் ஜாதி சான்றிதழ் அடிப்படையில் அந்த குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 11ம் தேதி காரைக்காலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Demonstration ,Vakpu ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்