விக்கிரவாண்டி அருகே பரபரப்பு டேங்கர் லாரிகள் கவிழ்ந்து விபத்து சாலையில் ஆறாக ஓடிய ஆயில்

விக்கிரவாண்டி, அக். 2: விக்கிரவாண்டி அருகே அழுக்கு ஆயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் டிரைவர், கிளீனர் படுகாயம் அடைந்தனர். சாலையில் ஆயில் ஆறாக ஓடியதால் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்தனர். சென்னையில் இருந்து ஒரு டேங்கர் லாரி அழுக்கு ஆயிலை ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்றது. லாரியை திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த பெருமாள் (36) என்பவர் ஓட்டியுள்ளார். கிளீனராக தேனி அம்மாபட்டியை சேர்ந்த செல்வம் (42) என்பவர் இருந்தார். நேற்று அதிகாலை 2 மணியளவில் விக்கிரவாண்டி காவல்நிலையம் அருகே லாரி வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென இடதுபுற தடுப்புக்கட்டையில் மோதி சர்வீஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் பெருமாள், கிளீனர் செல்வம் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த அவர்கள் 2 பேரையும் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் டோல்கேட் ஊழியர்கள் உதவியுடன் டேங்கர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். சாலை முழுவதும் ஆயில் ஆறாக ஓடியதால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்தனர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்:

சென்னையிலிருந்து மதுரைக்கு ஒரு டேங்கர் லாரி அழுக்கு ஆயில் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. லாரியை தர்மபுரி அடுத்த பள்ளப்பட்டியை சேர்ந்த தயானந்தன் (34) என்பவர் ஓட்டி வந்தார். விக்கிரவாண்டி அடுத்த பேரணி கூட்ரோடு அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி திடீரென இடதுபுற பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். இதுதொடர்பாகவும் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: