×

தமிழ் பேச தெரியாத வங்கி அலுவலரை மாற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, அக். 2: கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியில் ஆலத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.  கிராமங்களில் நடைபெறுகின்ற 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பொதுமக்களுக்கு வாரந்தோறும்  வங்கியின் வாயிலாக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆலத்தூர் இந்தியன்  வங்கி மூலம் சம்பளம் வழங்குவதற்கு நியமிக்கப்பட்ட நபர் கிராம மக்களுக்கு சரிவர சம்பளம் வழங்குவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் அவ்வங்கி மூலம்  அமைக்கப்பட்டுள்ள ஏடிஎம் மையத்தில் சரிவர பணம் வைப்பதில்லை. மேலும் அடிக்கடி  ஏடிஎம் இயந்திரம் பழுதாகிவிடுகிறது. இதனால் மக்கள் உரிய நேரத்தில் ஏடிஎம்  மையத்தில் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.  
 
இதுகுறித்து  அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட இந்தியன் வங்கி அலுவலரை அணுகி புகார் தெரிவிக்க முயன்றுள்ளனர். ஆனால் வங்கியில் பணியாற்றும் அலுவலருக்கு இந்தி  மட்டுமே தெரியும் என்பதால், பொதுமக்கள் தெரிவிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள், வெளிமாநில வங்கி அலுவலர்களை மாற்ற வலியுறுத்தியும், மக்கள் பிரச்னையை  தீர்க்காத ஆலத்தூர் இந்தியன் வங்கி நிர்வாகத்தை கண்டித்தும் வங்கி முன்பு திரண்டு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு  சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த  கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வங்கி உயர்அதிகாரிகளுக்கு  இதுகுறித்து தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.  இதனையேற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து  சென்றனர்.

Tags : demonstration ,bank officer ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்