×

சி.முட்லூர் புறவழிச்சாலை வழியாக கடலூருக்கு பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்

சிதம்பரம், அக். 2: சிதம்பரத்தில் இருந்து சி.முட்லூர் புறவழிச்சாலை வழியாக கடலூருக்கு பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் இருந்து சி.முட்லூர் வழியாக பு.முட்லூர் வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டு பயன்
படுத்தப்பட்டு வருகிறது. புறவழிச்சாலை வழியாக தொலைதூர பேருந்துகள், கனரக வாகனங்கள், கார், வேன்கள் சென்று வருகின்றன. ஆனால், தற்போது கடலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவால் வட்டார போக்குவரத்து அதிகாரி, அனைத்து பேருந்துகளும் புவனகிரி வழியாகத்தான் சென்றுவர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதனால் மதுரை, திருச்சி, நாகப்பட்டினம் உள்ளிட்ட தொலை தூரத்தில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகள் கூட புவனகிரி சுற்றி செல்வதால் நேர விரயமாவதாக நீண்ட தூரம் செல்லும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.  அதையும் மீறி புறவழிச்சாலை வழியாக செல்லும் பேருந்துகளை வட்டார போக்குவரத்து அதிகாரி பிடித்து அபராதம் விதிப்பதாக பேருந்து ஓட்டுநர்கள் புலம்புகின்றனர்.

கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், பள்ளி கல்வித்துறை அலுவலகம், தேர்வுத்துறை அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளன. இந்த அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் இருந்து தினந்தோறும் பல்வேறு அலுவல்களுக்காக ஏராளமானோர் சென்று வருகின்றனர். மேலும் சி.முட்லூரில் உள்ள நீதிமன்றம், வணிகவரி அலுவலகம், அரசு கலைக்கல்லூரி ஆகியவற்றுக்கு பலர் கடலூர் பகுதியில் இருந்து வருகின்றனர். சிதம்பரத்தில் இருந்து ஏராளமானோர் கடலூருக்கு தினந்தோறும் வேலைக்கு சென்று வருகின்றனர்.

சிதம்பரத்தில் இருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் தற்போது புவனகிரி வழியாக செல்கிறது. இதனால் சிதம்பரத்தில் இருந்து செல்பவர்களுக்கு கால விரயம் ஏற்படுகிறது. புவனகிரி பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் புவனகிரி வழியாக ஏராளமான பேருந்துகளும், அதே நேரத்தில் சிதம்பரத்தில் இருந்து கடலூர், புதுவைக்கு தினந்தோறும் சென்று வருபவர்களின் வசதியை கருதியும் சி.முட்லூர் பகுதி மக்கள் பயனடையும் வகையிலும் சில பேருந்துகளையாவது சி.முட்லூர் புறவழிச்சாலை வழியாக இயக்க வேண்டும் என பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : outlet ,Cuddalore ,C. Mudlur ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!