×

கடையம் அருகே மழையால் தொகுப்பு வீடு மேற்கூரை இடிந்தது

கடையம், அக். 2: கடையம் அருகே பராமரிப்பு இல்லாததால் அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. மேலும் பல வீடுகளின் மேற்கூரை இடிந்து வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர்.நெல்லை மாவட்ட கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சேர்வைகாரன்பட்டி ஊராட்சியில் கேளையாபிள்ளையூர் அருகே அம்பேத்நகர் உள்ளது. இங்குள்ள கீழத்தெருவில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் 50 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இவற்றில் மக்கள் வசித்து வருகின்றனர். கடையம் வட்டாரத்தில் கடந்த சில தினங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தொகுப்பு வீடுகள் போதிய பராமரிப்பு இல்லாததால் அங்கு வசிக்கும் மாடசாமி மகன் நாகூர் பிச்சை வீட்டின் மேற்கூரை ஈரப்பதத்துடன் காணப்பட்டது. இதையடுத்து நாகூர் பிச்சை குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி அருகிலுள்ள உறவினர் வீட்டில் தங்கினர்.

இந்நிலையில் நேற்று வீட்டின் மேற்கூரை முழுவதும் இடிந்து விழுந்தது. தகவலறிந்த கடையம் ஆர்ஐ அர்ஜூனன், கீழக்கடையம் பகுதி 1 விஏஓ ஹரிகரன் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இப்பகுதியில் உள்ள 50 தொகுப்பு வீடுளில் சுமார் 10 வீடுகள் இடிந்த நிலையில் காணப்படுவதால் அச்சத்திற்கு உள்ளான மக்கள் வசிக்க விரும்பவில்லை. நாகூர் பிச்சை வீட்டின் அருகில் உள்ள ராஜ், இசக்கியம்மாள் ஆகியோரது வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்து வருகின்றன.  மேலும் பல வீடுகளின் மேற்கூரை பலவீனமாக இடியும் நிலையில் உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இம்மாதம் துவங்கும் வடகிழக்கு பருவ மழை காலத்தில் இந்த பகுதி வீடுகள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சேதமாகியுள்ள தொகுப்பு வீடுகளை சீரமைக்க  வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : garage ,house ,
× RELATED ‘அமீகோ கேரேஜ்’ வி ம ர் ச ன ம்