×

நெல்லை மாவட்டம் முழுவதும் வங்கிகளின் வேலை நேரம் மாற்றம்

நெல்லை, அக். 2: நெல்லை மாவட்டம் முழுவதும் வங்கிகள் வேலை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள், தொழில் முனைவோர், வியாபாரிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரின் அன்றாட பயன்பாட்டில் வங்கி சேவை முக்கியப் பங்கு வகிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு ஒதுக்கப்படுகிற வேலை நேரம் வங்கிகள் தோறும் மாறுபடுகின்றன. சில வங்கிகள் காலை 9.30 மணி முதல் 3.30 மணி வரையும், சில வங்கிகள் காலை 10 மணி முதல் 4 மணி வரையும், சில வங்கிகள் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் என 3 அலுவல் நேரங்களில் செயல்பட்டு வருகின்றன.இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கான பொதுவான வங்கி வேலை நேரத்தை பின்பற்ற அறிவுறுத்தியது. இதன்படி ஆகஸ்ட் 28ம் தேதி நெல்லை மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தில் இயங்கும் வங்கிகள் அனைத்தும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை என்ற வேலை நேரத்தில் செயல்பட தீர்மானிக்கப்பட்டது. இந்த தீர்மானம் மாநில அளவிலான வங்கிகளின் குழுவுக்கு (எஸ்எல்பிசி) பரிந்துரைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் இயங்கும் வங்கிகள் அனைத்தும் நேற்று (1ம் தேதி) முதல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாடிக்கையாளர் வேலை நேரமாக கொண்டு இயங்கும் என முன்னோடி வங்கி மேலாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.Tags : banks ,paddy district ,
× RELATED மின்கட்டணம் செலுத்துவதில் மாற்றம்