×

கந்திலி பிடிஓ அலுவலகத்தில் திருமண நிதி உதவிக்கு லஞ்சம் வாங்கும் வீடியோ குறித்து சமூக நல அலுவலர் விசாரணை ஓராண்டுக்கு முன்பு எடுத்த வீடியோ என அதிகாரிகள் மழுப்பல்

திருப்பத்தூர், அக்.2: கந்திலி பிடிஓ அலுவலத்தில் திருமண நிதி உதவிக்கு லஞ்சம் வாங்கும் வீடியோ குறித்து மாவட்ட சமூக நல அலுவலர் விசாரணை மேற்கொண்டார். அப்போது, ஓராண்டுக்கு முன்பு எடுத்த வீடியோ என அதிகாரிகள் மழுப்பலாக தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் அடுத்த கந்திலி பிடிஓ அலுவலகத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் மற்றும் படித்த பெண்களுக்கு தமிழக அரசின் சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மற்றும் திருமண நிதிஉதவி அரசு ₹50 ஆயிரம் வழங்கி வருகிறது. இந்த திட்டத்திற்காக முறையாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவு அலுவலரிடம் மனு செய்து அவர்கள் உரிய விசாரணை மேற்கொண்டு திருமணத்திற்கு முன்பாக தாலிக்கு தங்கம் மற்றும் திருமண செலவிற்காக ₹50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த திட்டத்தில் மாவட்டம் முழுவதும் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டு வருகிறது. மேலும், தற்போது பிடிஓ அலுவலகத்தில் உள்ள சமூகநல பிரிவு அலுவலர் ராமக்கா என்ற சமூக நல திருமண உதவி திட்டத்திற்கு பதிவு செய்யவும் விண்ணப்பத்தின் மூலம் அரசு திட்டத்தை பெற்றுத்தரவும் அங்கநாத வலசை கிராமத்தை சேர்ந்த சத்யா என்ற தம்பதியிடம் ₹5 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே தங்களுக்கு அரசு திட்டத்தின் சார்பில் தாலிக்கு தங்கம் மற்றும் ₹50 ஆயிரம் பணம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் விரிவு அலுவலரிடம் பேசி ₹3,500 லஞ்சமாக கொடுத்ததை வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இதுகுறித்து பத்திரிகைகளில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து மாவட்ட சமூக நல அலுவலர் முருகேஸ்வரி கந்திலி பிடிஓவிடம் விசாரணை மேற்கொள்வது குறித்து கடிதம் அனுப்பியிருந்தார். அதன்படி, நேற்றுமுன்தினம் சமூகநல அலுவலர், ராமக்காவிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது, ஒரு ஆண்டுக்கு முன் கந்திலி பிடிஓ அலுவலகத்தில் பணிபுரியும்போது எடுத்த வீடியோவை தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர் என மழுப்பலாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட சமூகநல அலுவலர் முருகேஸ்வரியிடம் கேட்டபோது, ‘வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சமூக நல விரிவு அலுவலர்களுக்கு மாதந்தோறும் நடக்கும் கூட்டத்தில் பயனாளிகளிடம் நீங்கள் பணம் பெற்றுக்கொண்டு பணி செய்யக் கூடாது என்று தெரிவித்துள்ளோம். ஆனால், தற்போது இந்த சிக்கலில் மாட்டியுள்ளார் ராமக்கா என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பணியாற்றி கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் மீண்டும் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வந்துள்ளார். தற்போது இவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது வீடியோ ஆதாரத்துடன் வெளிவந்துள்ளது. விசாரணை மேற்கொண்டதில் கடந்த ஓராண்டுக்கு முன்பு எடுத்த வீடியோ என்று தெரிவித்துள்ளார். எப்படி இருந்தாலும் தவறு தவறுதான் என்று கூறி உள்ளேன். இதுகுறித்து அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க சென்னை சமூக நல இயக்குநர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அவர்கள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினார்.

Tags : social welfare officer ,office ,Gandli PDO ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...