×

துறையூர் பகுதியில் பனை விதைகள் நட்டு பயன்கள் குறித்து விளக்கம்

துறையூர், அக்.1: துறையூர் பகுதியில் மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. துறையூர் பகுதியில் நடப்பாண்டில் நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு திட்டம் ஆயிரம் எக்டர் பரப்பளவில் நாகலபுரம், நடுவலூர் முத்தையம்பாளையம் மற்றும் அம்மாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு உழவு மானியம், பழக்கன்றுகள் மற்றும் மரக்கன்றுகள். பனை விதைகள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் நாகலபுரம் கிராமத்தை சேர்ந்த கீழகுன்னுப்பட்டி மற்றும் முத்தையம்பாளையம் கிராம விவசாயிகளுக்கு பனை விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு துறையூர் வேளாண் உதவி இயக்குநர் கோவிந்தராசு தலைமை வகித்தார். இதில் 50 விவசாயிகள் கலந்துகொண்டு பனை விதைகளை பெற்று நடவு செய்தனர். விவசாயிகளுக்கு பனை மரத்தால் மண் அரிப்பு தடுக்கப்படுவது, நிலத்தடி நீர்மட்டம் காக்கப்படுவது, சுற்றுச்சூழல் மேம்படுவது, மற்றும் நடவு செய்யும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது. திருச்சி நாளந்தா வேளாண் கல்லூரியை சேர்ந்த இளங்கலை இறுதியாண்டு பயிலும் மாணவிகள் 10 பேர் மக்காச்சோளம் பயிரில் ஏற்படும் படைப்புழு தாக்குதல் அறிகுறி, அதை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். நிகழ்ச்சியில் வேளாண் உதவி அலுவலர் சிவபெருமாள், தினேஷ், கவிதா மற்றும் வேளாண் துணை அலுவலர் வடிவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags : Thuraiyur ,
× RELATED துறையூர் அருகே கார், ஆட்டோ மோதல் முதியவர் பரிதாப பலி