×

தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம்

திருவெண்ணெய்நல்லூர், அக். 1: திருவெண்ணெய்நல்லூரில் மிகவும் தாழ்வாக செல்லும் மின்கம்பியால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் மின் ஊழியர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பேரங்கியூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இப்பகுதியின் அருகில் கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் தனியார் ஆலைகள் உள்ளதால் இப்பகுதி விவசாயிகள் கரும்பு பயிரையே அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர்.இந்நிலையில் இப்பகுதியில் விவசாயிகளின் மின்மோட்டார்களுக்காக வயல்வெளி பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது சேகர் என்பவரின் நிலத்தின் வழியாக, ஆறுமுகம் மகன் லட்சுமணன் என்பவரின் நிலத்திற்கு செல்லும் வழியில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால் காற்று அடிக்கும்போது மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பற்றி கரும்பு பயிர் சேதம் அடையும் அபாயம் உள்ளது.இதுகுறித்து விவசாயிகள் பலமுறை மின்சார ஊழியர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தமனமாக இருந்து வருவதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் தீவிபத்து ஏற்படுவதற்கு முன்பு தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : accident ,
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...