×

மு.க.ஸ்டாலின், ராஜஸ்தான் முதல்வர் புதுவை வருகை

புதுச்சேரி, அக். 1: காமராஜர் நகர் இடைத்தேர்தலில் காங்கிரசை ஆதரித்து பிரசாரம் செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராஜஸ்தான் முதல்வர்  ஆகியோர் புதுச்சேரி வருகின்றனர். புதுவை காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது. இதில் குறிப்பாக காங்கிரசுக்கும்-என்.ஆர்.காங்கிரசுக்கும் இடையே பலத்த போட்டி உள்ளது.  காங்கிரஸ் சார்பில் ஜான்குமாரும், என்.ஆர்.காங்கிரசில் புவனேஸ்வரனும், மக்கள் முன்னேற்ற காங்கிரசில் வெற்றிச்செல்வனும்  களத்தில் உள்ளனர். ஜான்குமார் தரப்பில் மாற்று வேட்பாளர் உட்பட 4 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். அதேநேரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரன் மட்டுமே மனுதாக்கல் செய்துள்ளார். மாற்று வேட்பாளராக  நந்தா தரை தயார் செய்து வைத்திருந்தனர். ஆனால் கட்சியின் ஏ மற்றும் பி படிவங்களை  வழங்காததால் மாற்றுவேட்பாளர்  வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை  என தெரியவந்துள்ளது.
 இதற்கிடையே காங்கிரஸ் கட்சி நேற்று மாலையே தனது பிரசாரத்தை துவக்கியுள்ளது. முதல்வர் நாராயணசாமி, வேட்பாளர் ஜான்குமார் ஆகியோர் தெற்கு மாநில திமுக அமைப்பாளர் சிவா,  வடக்கு மாநில திமுக அமைப்பாளர் எஸ்பி சிவக்குமார்  உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினர்.

இந்நிலையில் காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து வருகிற 17ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், அதைத்தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வர், துணைமுதல்வர் ஆகியோரும் பிரசாரம் செய்ய உள்ளதாக   முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், “கடந்த 3 ஆண்டுகளில்  அரசு செய்த சாதனைகளை விளக்கி கூறி மக்களிடம் வாக்கு சேகரிப்போம். மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.  கூட்டணி கட்சித்தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்போம். முதல்கட்டமாக கூட்டணி கட்சியினருடன் கலந்து ஆலோசனை நடத்தியுள்ளோம். ஏற்கனவே காமaராஜர் நகர் தொகுதியில் வைத்திலிங்கம் எம்பி இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். அவர் மக்கள் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்துள்ளார். நாடாளுமன்றa தேர்தலில் காமராஜர் நகர் தொகுதியில் 15 ஆயிரம் வாக்குகளை பெற்றிருக்கிறார். எங்களுடைய வேட்பாளர், நெல்லித்தோப்பு தொகுதி மக்களுக்கு செய்ததை போல, காமராஜர் நகர் மக்களுக்கும் நல்லது செய்வார்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து வரும் 17ம் தேதி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்யவுள்ளார்.  இதேபோல் காமராஜ் நகர் தொகுதியில் ராஜஸ்தான் மக்கள் அதிகமாக இருப்பதால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோரும் பிரசாரம் செய்ய புதுச்சேரி வருகிறார்கள் என்றார்.

Tags : MK Stalin ,Chief Minister ,Rajasthan ,
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...