×

பைக் திருடிய வாலிபர் கைது

நெட்டப்பாக்கம், அக். 1: புதுவை மாநிலம் நெட்டப்பாக்கம் நெசவாளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (30). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் கம்பெனி எதிரே பைக்கை நிறுத்தி வைத்துவிட்டு பணிக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் ஜெகதீஷ் புகார் அளித்தார். இந்நிலையில், ஏரிப்பாக்கம் 4 முனை சந்திப்பு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் சந்தேகப்படும்படியாக வந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது, பைக் திருடியதை ஒப்புக் கொண்டார். விசாரணையில் அவர் ஏரிப்பாக்கம் பழைய காலனி பகுதியை சேர்ந்த அஜித்குமார் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அஜித்குமார் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவர் வேறு ஏதாவது இடங்களில் பைக் திருடினாரா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED ஏரியில் மூழ்கி வாலிபர் பலி