×

சேத்தியாத்தோப்பு பகுதியில் பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு

சேத்தியாத்தோப்பு, அக். 1: சேத்தியாத்தோப்பு பேரூராட்சி 11 வார்டு தெற்கு சென்னிநத்தம் ஆசிரியர் தெருவில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 750க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகளும் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் தேங்கி, கழிவு நீருடன் கலந்ததால், துர்நாற்றம் வீசத் தொடங்கியது. தேங்கியுள்ள நீரை அகற்ற கோரி, பொதுமக்கள் தேங்கிய மழை நீர் கலந்த கழிவு நீரில் அமர்ந்து கோஷமிட்டனர்.தகவல் அறிந்து சேத்தியாத்தோப்பு காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா, தனிப்பிரிவு ஏட்டுக்கள் வெங்கட கிருஷ்ணன், திருமுருகன் மற்றும் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.இதையடுத்து, தேங்கிய மழை நீரை உடனடியாக வெளியேற்ற பேரூராட்சி ஊழியர்களிடம் செயல் அலுவலர் சீனிவாசன் உத்தரவிட்டதன் பேரில் பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, சாலையில் தேங்கி நின்ற மழைநீர் வெளியேற்றப்பட்டது.

இது தொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இளங்கோவன், செயல் அலுவலர் சீனிவாசனிடம் ஆலோசனை நடத்திவிட்டு, ஆசிரியர் தெருவில் மழை நீர் தேங்கி நிற்பதை பார்வையிட்டார். தொடர்ந்து எம்எல்ஏ ஒதுக்கிய தொகுதி மேம்பாட்டு நிதியில், சாலை பணியை துவங்க வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை பணிகளையும், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் ராஜா, உதவி பொறியாளர் திருச்செல்வம், சேத்தியாத்தோப்பு பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன், அலுவலக உதவியாளர் செல்வராஜ் மற்றும் ஊழியர்கள் ஜோதி, ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.



Tags : Inspection ,Assistant Director ,Faculty of Chettiyoppu Area ,
× RELATED தாராபுரம் அலங்கியத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.92 ஆயிரம் சிக்கியது