×

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

புவனகிரி, அக். 1: கீரப்பாளையம் அருகே உள்ள குமாரகுடியில், நரிக்குறவர்கள் சமூகத்தை சேர்ந்த 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், நூறு நாள் வேலை திட்டத்திற்கான வேலை உறுதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 4 ஆண்டுகளாகியும் இதுநாள் வரை அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை.இது குறித்து திடீர் ஆய்வு நடத்தி விசாரணை நடத்த கோரியும், உடனடியாக 100 நாள் வேலை கேட்டும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் நெடுஞ்சேரதாலன், புவனகிரி ஒன்றிய செயலாளர் மணி, நரிக்குறவர் பகுதி கிளை செயலாளர் ராஜி உள்பட 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதை தொடர்ந்து அனைவரும் கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர். வரும் வாரத்தில் இருந்து இவர்களுக்கு வேலை கொடுக்கப்படும் என்றும், நான்கு ஆண்டுகளாக ஏன் வேலை கொடுக்கவில்லை என விசாரித்து, அதில் முறைகேடு நடந்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : union protests ,
× RELATED கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்...