×

வத்திராயிருப்பு, திருவில்லிபுத்தூர் ராஜபாளையத்தில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த மழை

வத்திராயிருப்பு/திருவில்லிபுத்தூர், அக். 1: வத்திராயிருப்பு மற்றும் திருவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக போதிய மழை இல்லாததால் பிளவக்கல் பெரியாறு, கண்மாய்கள், குளங்கள் வறண்டன. விவசாயக் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது.  கடந்த 1984, 1991, 2001 ஆகிய ஆண்டுகளில் விடிய விடிய மழை பெய்து, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. கண்மாய்களில் நீர்நிறைந்து கரைகளில் உடைப்பு ஏற்பட்டது. இந்நிலையில் வத்திராயிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டித் தீர்த்தது. இதனால், பிளவக்கல் பெரியாறு அணையில் ஒரே நாளில் நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்தது.
பிளவக்கல் பெரியாறு அணையின் உயரம் 47.54 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 300 கனஅடி. சில தினங்களுக்கு முன் அணையின் நீர்மட்டம் 4 அடியாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 21 அடி உயர்ந்து மொத்தம் 25 அடியாக உள்ளது.

கோவிலாறு அணையில் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். மழை அளவு: கோவிலாறு அணை 90 மி.மீ., பிளவக்கல் பொியாறு அணை 115.6 மி.மீ. வத்திராயிருப்பு 146.4 மி.மீ. அருவிகளில் காட்டாற்று வெள்ளம்: திருவில்லிபுத்தூர்  பகுதியில் போதிய மழை இல்லாததால், கடந்த ஒன்றரை ஆண்டாக கண்மாய்கள் குளங்கள்  வறண்டு கிடந்தன. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மீன் வெட்டி பாறை அருவி,  சரக்கு பாறை அருவி, ராக்காச்சி கோயில் அருவி மற்றும் பல்வேறு ஓடைகள்  வறண்டன. இதனால், வனவிலங்குகள் கடந்த சில வாரங்களாக மலையடிவாரத்தில்  முகாமிட்டன.  நேற்று முன்தினம் இரவு  திருவில்லிபுத்தூர் பகுதிகளில்  பெய்த பலத்த மழையால்,   செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும்  அருவிகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  திருவில்லிபுத்தூரில் வறண்டு கிடந்த ஆண்டாள் கோயில் முக்குளத்திற்கு  நீர்வரத்து ஏற்பட்டது.  

ராஜபாளையம் பகுதியில் மழை
ராஜபாளையம் அதன்  சுற்று வட்டாரத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது. இதேபோல, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான சாஸ்தாகோயில் மற்றும் அய்யனார் கோயில் மழை பெய்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழையால் நிலத்தடி நீர் உயர்ந்து விவசாயத்துக்கு பயன்படும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதேபோல, ராஜபாளையத்தில் குடிநீர் ஆதாரமாக விளங்கும், ஆறாவது மயில் நீர்த்தேக்கத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சாஸ்தாகோவில் அணை நிரம்பி உள்ளதால் விவசாயத்துக்கு பயன்படும். மேலும், ராஜபாளையம் குடிநீர் பிரச்னையும் தீரும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Thiruvilliputtur Rajapalayam ,
× RELATED திருவில்லிபுத்தூர்-ராஜபாளையம் சாலையில் படியும் கண்மாய் கரை மண்