×

வத்திராயிருப்பு, செட்டியார்பட்டியில் தெருக்களில் தேங்கிய மழைநீர்

வத்திராயிருப்பு/ராஜபாளயைம், அக். 1: வத்திராயிருப்பு பேரூராட்சி 17 மற்றும் 18வது வார்டு பகுதியில் மழைநீர் செல்லும் சேமாற்று ஓடை உள்ளது. இந்த ஓடையை தூர்வாராமல் புதர்மண்டிக் கிடக்கிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் சேமனாற்று ஓடையில் செல்ல வேண்டிய மழைநீர் மற்றும் கழிவுநீர் மேலப்பாளையம் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மேலப்பாளையத்திலிருந்து தாலுகா அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலங்களுக்கு செல்லும் வழியை, கற்கள் மற்றும் முட்செடிகளால் அடைத்தனர். பின்னர் பேரூராட்சி அதிகாரிகள் சேமனாற்று ஓடையில் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரினர். இதேபோல, மகாராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்திலும் மழைநீர் தேங்கியுள்ளது. வத்திராயிருப்பில் இருந்து கிருஷ்ணன்கோவில் செல்லும் சாலையில் புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.

5 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் சாவு: வத்திராயிருப்பு அருகே நெடுங்குளம் செல்லும் சாலையில் அம்மச்சியாபுரம் காலனியை சேர்ந்தவர் 5 ஆயிரம் கோழிக்குஞ்சு வளர்த்தார். மழையால் இந்த கோழிக்குஞ்சுகள் அனைத்தும் இறந்தன.
செட்டியார்பட்டியில் மழைநீர் தேக்கம்: ராஜபாளையம் அருகே, செட்டியார்பட்டி பேரூராட்சியில் வனமூர்த்திலிங்கம் பிள்ளை தெரு, பாம்பலம்மன் கோயில் தெரு, பாலவிநாயகர் கோயில் தெரு, புனல்வேலி ஊரணிபட்டி தெரு ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த தெருக்களில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால், வாறுகால்களில் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் மழைநீர் தேங்கியது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டனர். இந்த பேரூராட்சியில் உள்ள அனைத்து தெருக்களில் வாறுகால் மற்றும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணிகளுக்காக, கேபிடல் கிராண்ட் திட்டம் 2018-2019 உள்ளிட்ட திட்டத்தின் கீழ், ரூ.2 கோடிகளுக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு, ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு, பணியாணை வழங்கி ஓராண்டுக்கு மேலானது. ஆனால், இதுவரை பணி தொடங்கப்படவில்லை. தெருக்கள் மற்றும் வாறுகாலை சீரமைத்து இருந்தால் மழைநீர் தேங்காமல் இருந்திருக்கும் என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

Tags : streets ,Vedrayapuri ,Chettiarpatti ,
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...