×

இளையான்குடியில் விவசாய நிலங்களில் களை மருந்து தெளிப்பு விவசாயிகள் மும்முரம்

இளையான்குடி, அக்.1:  இளையான்குடி பகுதியில் பெய்த மழையை பயன்படுத்தி,  விவசாய நிலங்களில் களை மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இளையான்குடி பகுதியில் கடந்த மூன்று ஆன்டுகளாக பருவமழை சரியாக பெய்யாததால்,  கண்மாய்கள் அனைத்தும் வறண்டன. மேலும் போதிய பராமரிப்பு இல்லாத நிலையில் வாய்க்கால்கள், கால்வாய்கள் தூர்ந்துபோயின. ஆனாலும் விவசாயத்தை கைவிடாத விவசாயிகள், பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நெல் மற்றும் மிளகாய் விதைப்பு முடிவுற்ற நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. பெய்த மழையை பயன்படுத்தி ஈரமுள்ள வயல்களில் உள்ள களைகளை அப்புறப்படுத்தும் விதமாக,  களைகொல்லி மருந்தை தெளிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதனால் வயல்களில் உள்ள அருகு, கோரை, சீகு, அடிப்புல், நொண்டிப்புல் மற்றும் அமலை, வினைபூண்டு ஆகிய களைகளை அழிக்க களை மருந்துகளை தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுப்பட்டுள்ளனர்.  அதனால் தனியார் உரக்கடைகளில், ஒரு லிட்டர்  ரூ.200 முதல் 400 வரை விற்கப்படும் இந்த களை மருந்தை விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். இதுகுறித்து விவசாயி  சண்முகம் கூறுகையில், விவசாய நிலங்களை விதைப்புக்காக தயார்படுத்தவும், ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்கவும், இந்த களை மருந்தை  தெளிக்கிறோம். பதினைந்து நாட்களுக்குள் சரளமாக களைகள் கட்டுப்படுத்தப்படும். இருந்தாலும் மண்ணுக்கும், விதைக்கும் இந்த களை மருந்து கேடுதான். வேறு வழியின்றி இதை தெளிக்கிறோம். இதனை கட்டுப்படுத்த வேளாண்துறை மாற்று யோசனைகள் வழங்க வேண்டும். விவசாயம் செழிப்பாக நடக்க போதிய மழை பெய்ய வேண்டும் என்றார்.

Tags : farm lands ,
× RELATED விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட ஐகோர்ட் உத்தரவு