×

மானாமதுரை புது பஸ்ஸ்டாண்டு நுழைவு வாயிலில் தொடரும் விபத்துகள் போக்குவரத்து போலீசார் நியமிக்க வலியுறுத்தல்

மானாமதுரை, அக்.1:  மானாமதுரை புதுபஸ்ஸ்டாண்டிற்குள் செல்லும் பஸ்கள் அவசரமாக இடதுபுறம் இருந்து வலதுபுறமாக திரும்புகின்றன. இதனால் பின்னால் வரும் வாகனங்கள், பாதசாரிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.   
மானாமதுரை புது பஸ்ஸ்டாண்டு மதுரை-ராமேஸ்வரம் நான்குவழிச்சாலையில் அமைந்துள்ளது. இங்கிருந்து மதுரை, ராமேஸ்வரம், கமுதி, விருதுநகர் உள்ளிட்ட நான்கு மார்க்கங்களில் இருந்தும் ஏராளமான அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ்சில் செல்வதற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த பஸ்ஸ்டாண்டிற்கு வருகின்றனர். மதுரை ராமேஸ்வரம் நான்குவழிச்சாலை பணிகள் முடிந்து போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் பைபாஸ் மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் அதிவேகமாக பகல், இரவு நேரங்களில் பஸ்ஸ்டாண்டிற்குள் நுழைகின்றன. இந்த இடத்தில் போக்குவரத்து போலீசார் இல்லாததால் வாகனம் திரும்புவது பற்றி அறியாத பிறவாகனங்கள் பஸ்ஸ்டாண்டிற்குள் நுழைய முயலும் வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் இரவு நேரங்களில் இரண்டு நுழைவு வாயில்கள் அருகிலும் மின்விளக்குகள் இல்லாததால் வாகனங்கள் மோதிக்கொள்ளும் நிலை உள்ளது. மேலும் ரோட்டை கடக்க முயலும் பாதசாரிகளும் அடிபட்டு இறக்க வாய்ப்புள்ளது.

பஸ்ஸ்டாண்டின் வலதுபுறத்தில் உள்ள  சர்வீஸ்ரோட்டை ஒட்டிய நுழைவுவாயில் வழியாகவே அனைத்து ஊர்களுக்கும் செல்ல வேண்டிய பஸ்கள் வந்து செல்கின்றன. மதுரையில் இருந்து ராமேஸ்வரம், கமுதி, விருதுநகர் செல்லும் பஸ்கள் புதுபஸ்ஸ்டாண்டிற்குள் நுழையும் போது இடதுபுறத்தில் இருந்து வலதுபுறமாக திடீரென திரும்புகின்றன. இதனால் முன்னால் வரும் வாகனங்களும் எதிரே வரும் வாகன ஓட்டிகளும் குழப்பம் அடைந்து விபத்தில் சிக்குகின்றனர்.இவ்வாறு நடந்த விபத்துகளில் மூன்று மாதங்களில் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பெரியளவில் உயிர்ப்பலி ஏற்படும் முன் போக்குவரத்து போலீசார் நியமிக்கவும், ஒளிரும் வேகத்தடுப்புகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கேசவன் கூறுகையில், நேற்று முன்தினம் அரசு பஸ் மீது சுற்றுலா சென்ற கார் மோதியதில் பஸ் படிக்கட்டு அருகே நின்றவருக்கு இரண்டுகால்களும் முறிந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூன்று மாதங்களில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். ஒருவர் இறந்துள்ளார். மேலும் உயிர்ப்பலி ஏற்படும் முன் போக்குவரத்து போலீசார் நியமிக்கவும், உயர்கோபுர மின்விளக்கும்,  இரும்பால் ஆன வேகத்தடுப்புகள் அமைக்கவும் வேண்டும் என்றார்.

Tags : accidents ,bus stand ,Manamadurai ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை