×

போதிய மழை பெய்ததால் மிளகாய் விதைப்பு பணி தீவிரம்

பரமக்குடி, அக்.1: பரமக்குடி பகுதியில் கிராமங்களில் மிளகாய் விதைப்பில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் பணப்பயிராக மிளகாய் சாகுபடி உள்ளது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆண்டுதோறும் சுமார் 60 ஆயிரம் ஏக்கரில் மிளகாய் பயிரிடப்படுகிறது. பரமக்குடி, போகலூர், நயினார்கோவில், சூடியூர் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போதிய மழை பெய்துள்ளதால் இந்தாண்டு 1,500 எக்டேரில் மிளகாய் விதைப்பு செய்துள்ளனர்.இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது: ‘‘மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக போதிய மழை பெய்யாததால் ஏரி, குளம், ஆறு, கிணறு உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. மேலும் ஆழ்துளை கிணற்றின் நீர்மட்டமும் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் நிலங்களை தரிசாக போட்டு விட்டனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவதால், விவசாயிகள் விதைப்பு பணியிலும், உழவு பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குண்டு மிளகாய்களை அதிகளவில் இப்பகுதி விவசாயிகள் விதைத்து வருகின்றனர்.மிளகாய் செடிகள் முளைத்ததில் இருந்து, இடையிடையே லேசான ஈரம் மட்டும் இருந்தாலே, நல்ல மகசூல் பெற்றுவிடலாம் என்பதால் மிளகாய் விதைப்பை தீவிரப்படுத்தி வருகிறோம். தொடர்ந்து மழை பெய்தால் நல்ல மகசூல் கிடைக்கும். தை மாதத்தில் அறுவடை பணிகளை தொடங்குவோம்’’என்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை