×

பாம்பன் சாலை பாலத்தில் முட்செடிகளால் தடுப்பு சுவர் சேதம்

ராமேஸ்வரம், அக்.1: பாம்பன் சாலைப்பாலத்தின் அருகில முட்செடிகள் வளர்ந்து தடுப்பு சுவர் சேதமடைந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. பாம்பன் சாலைப்பாலம் துவங்கும் இடத்தில் மழைநீர் மற்றும் கடல் அரிப்பிலிருந்து பாலத்தை பாதுகாக்கும் வகையில் பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. சதுர வடிவிலான கற்களால் சாய்வாக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் பாம்பன் மற்றும் பாம்பன் நிலப்பகுதியில் சாலைப்பாலம் துவங்கும் இடத்திலிருந்து கடற்கரை அருகில் தூண்கள் துவங்கும் இடம் வரை உள்ளது.இத்தடுப்பு சுவரில் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து சேதமடைந்துள்ளது. மேலும் தடுப்பு சுவரின் மேல்பகுதியிலும், தடுப்புச்சுவர் அருகிலும் முட்செடிகள் வளர்ந்து இதன் வேர்களினால் கற்கள் பெயர்ந்து சேதமடைந்துள்ளது.

பாலத்தின் தடுப்பு சுவரில் குறிப்பிட்ட பகுதி என்றில்லாமல் அனைத்து பகுதியிலும் முட்செடிகள் வளர்ந்துள்ளதுடன், பல இடங்களில் கற்கள் பெயர்ந்து தடுப்பு சுவரின் தன்மையும் மாறி வருகிறது. நாளடைவில் கற்கள் பெயர்ந்து மழைநீரால் அரிப்பு ஏற்பட்டு தடுப்பு சுவர் பெரிய அளவில் சேமதடைந்தால் பாலத்தின் இரண்டு பக்க ஸ்திரத்தன்மையும் பாதிக்கப்படும்.சிறிதாக இருக்கும்போதே முட்செடிகள் அகற்றப்படாததால் பெரிய மரமாக வளர்ந்துள்ளது. இதனால் பாம்பன் சாலைப்பாலத்தின் பாதுகாப்பு கருதி தடுப்பு சுவரில் வளர்ந்திருக்கும் முட்செடிகளை அகற்றி, கற்கள் பெயர்ந்து சேதமடைவதையும் தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.மேலும் பாலத்தின் தடுப்பு சுவரின் ஓரங்களில் அதிகளவில் வேலிக்கருவை மரங்கள் முளைத்துள்ளதாலும், அதிகளவில் மீன் கழிவுகளும், குப்பைகளும் கொட்டப்பட்டு சுற்றுப்புறம் சுகாதாரமற்று காணப்படுவதால் இதனையும் சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : bridge ,Pompon Road ,
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...