×

முதுகுளத்தூர் பஜாரில் மரத்தை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

சாயல்குடி, அக்.1: முதுகுளத்தூர் பஜாரில் பொதுமக்களுக்கு நிழல் தந்த மரத்தை பேரூராட்சி நிர்வாகம் அகற்றியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதுகுளத்தூர் பேரூராட்சியில் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. முதுகுளத்தூர் செல்வநாயகபுரம் பாலம் முதல் கடலாடி சாலை வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் கடைகள் உள்ளன. கடைகள் முன்பு நிழல் தரும் மரங்களை நெடுஞ்சாலைத் துறை, கடைக்காரர்கள் வைத்து பராமரித்து வந்தனர். பெரும்பாலான மரங்கள் வளர்ந்து பெரிய மரங்களாகி நிழல் தந்து கொண்டிருந்தது. இந்நிலையில் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் எதிர்புறம் கடைகளுக்கு முன்பு இருந்த மரங்களை முன் அறிவிப்பு ஏதுமின்றி பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினர். இதனை பார்த்த பொதுமக்கள், கடைக்காரர்கள் பேரூராட்சி ஊழியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.கடும் எதிர்ப்பை தொடர்ந்து அகற்றப்பட்ட மரத்தை பேருந்து நிலையம் நுழைவு வாயில் பகுதியில் போட்டு விட்டு சென்றனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறாக கிடக்கும் மரத்தை அகற்ற வேண்டும். அகற்றிய மரத்திற்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை நட்டு பேரூராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : protest ,Mudukulathur Bazaar ,
× RELATED 6 வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு...