×

வடகிழக்கு பருவமழையின் போது புகார் தெரிவிக்க கலெக்டர் ஆபிசில் பேரிடர் கால கட்டுப்பாட்டு மையம்

சேலம், அக்.1: வடகிழக்கு பருவமழையின் போது, பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள கலெக்டர் ஆபீசில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் கலெக்டர் ஆபீசில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை வகித்து கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது, நீர்நிலைகளால் பாதிக்கப்படும் பகுதிகளாக 23 பதற்றமான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளை கண்காணிக்கவும், மாவட்ட அளவிலான அனைத்து கிராமப்பகுதிகளையும் ஆய்வு செய்யவும் துணை கலெக்டர் நிலை அலுவலர்கள் தலைமையில் பல்துறை அலுவலர்களைக் கொண்டு மண்டல கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் நிவாரண மையம் அமைத்து, அந்த மையத்தில் தங்க வைக்கும் பொதுமக்களுக்கு, அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைத்திருக்கவும், பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் நபர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கவும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது விநியோகத்திட்டத்தில் உள்ள உணவுப்பொருட்கள், பருவமழை காலங்களில் 3 மாதங்களுக்கு இருப்பு வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மழை காலங்களில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து போதுமான மருந்துகள் தயார் நிலையில் இருப்பு வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பாம்பு மற்றும் விஷக்கடி மருந்துகள் தயார் நிலையில் அரசு மருத்துவமனைகளில் இருப்பு வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மீட்பு உபகரணங்களான பொக்லைன், ஜெனரேட்டர், மரம் அறுக்கும் கருவி, டார்ச் லைட் போன்ற உபகரணங்கள் திட்டமிட்டு முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ஏரி மற்றும் மதகுகள், குளம் மற்றும் வாய்க்கால் ஆகியவை தூர்வாரப்பட்டு வருகிறது. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் கழிவுநீர் வாய்க்கால்கள் அடைப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள வேண்டும். மழைநீர் வடிகால் வசதியும் ஏற்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் மற்றும் சிறுபாலங்கள், பாலங்கள் தொடர் கண்காணிப்பில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பருவமழை காலங்களில் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் கால்நடை மருந்தகங்களில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியம், இம்மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, தாழ்வான பகுதிகளில் செல்லும் மின் ஒயர்களை மாற்றியும், பழுதடைந்துள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகளை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய வேண்டும். வடகிழக்கு பருவமழையின் போது, பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள கலெக்டர் ஆபீசில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தினை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண். 1077 மற்றும் 0427-2452202 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க லாம்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Tags : Office ,Disaster Management Center ,Collector ,Northeast Monsoon ,
× RELATED வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா...