×

செயலாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் மோதல் முற்றுகிறது

நாமக்கல், அக்.1: நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக கூறி, செயலாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப  தலைவர் தலைமையில் நேற்று நடைபெற்ற அவசர செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த மே மாதம், சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவராக வாங்கிலி 2வது முறையாக வெற்றி பெற்றார். முன்னாள் தலைவர் நல்லதம்பியின் ஆதரவாளரான ரவி செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, புதிய நிர்வாகிள் பதவியேற்பு விழா, கடந்த ஜூலை 4ம் தேதி நடைபெற்றது. அன்று மாலை சங்கத்துக்கு வந்த செயலாளர் ரவி, சங்கத்தின் மினிட் நோட்டை எடுத்து சென்றுவிட்டார். இது குறித்து தலைவர் வாங்கிலி, நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இருதரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசி, தீர்மான புத்தகத்தை ரவியிடம் இருந்து வாங்கி, சங்க மேலாளர் வேலுவிடம் ஒப்படைத்தனர்.

தீர்மான புத்ககத்தில் சில பக்கங்களை, செயலாளர் ரவி கோடு போட்டு அழித்து விட்டதாகவும், இதனால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எழுதமுடியவில்லை எனவும், சங்கத்தை புதுப்பிக்க முடியவில்லை எனவும் தலைவர் கூறினார். இது தொடர்பாக தலைவர் வாங்கிலி, செயலாளர் ரவி இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் செயலாளர் ரவி, நாமக்கல் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், தனக்கு தெரியாமல் சட்டவிரோதமாக செயற்குழு கூட்டம் 30ம்தேதி, (நேற்று) கூட்டப்படுகிறது. இந்த கூட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று இரவு திட்டமிட்டபடி சங்க தலைவர் வாங்கிலி தலைமையில் செயற்குழு கூட்டம், சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் வரவு-செலவு கணக்கு சரிபார்க்கப்பட்டு செயற்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது. மேலும், சங்க செயலாளர் ரவியின் நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானம்:
கடந்த ஜூலை 4ம் தேதி, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மினிட் நோட்டில் எழுதமுடியவில்லை. செயலாளர் ரவி, சங்க செயல்பாட்டுக்கு இடையூறாக நடந்து கொள்கிறார்.

தீர்மான புத்தகத்தில் 3 பக்கங்களை சிவப்பு மையால் கோடிட்டு அவர் அடித்து விட்டதால், அந்த பக்கத்தில் தீர்மானத்தை எழுதக்கூடாது  என மாவட்ட பதிவாளர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பிவிட்டார். இதனால் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில், சங்கத்தின் புதுப்பிப்பு ஆவணங்கள் முழுவதையும் தாக்கல் செய்ய முடியவில்லை. செயலாளரின் செயல்பாடுகள், சங்கத்தின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கிறது. சங்கத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது. எனவே, இது குறித்து செயலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். இவ்வாறு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
நிர்வாகிகள் மீது புகார் தெரிவித்த சங்க செயலாளர் ரவி, நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில், உதவித்தலைவர் சுப்புரத்தினம், இணை செயலாளர் மயில்ஆனந்த், பொருளாளர் சீரங்கன் மற்றும் 44 செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். செயற்குழு கூட்டம் நடப்பதையொட்டி, நேற்று மாலை நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : Conflict ,
× RELATED உட்கட்சி மோதலால் கர்நாடகாவில்...