×

படேதலாவ் ஏரிக்கரையை பலப்படுத்தி கால்வாய்களை தூர்வார வேண்டும்

கிருஷ்ணகிரி, அக்.1:  கிருஷ்ணகிரி படேதலாவ் ஏரிக்கரையை பலப்படுத்தி, இடது மற்றும் வலதுபுற கால்வாய்களை தூர்வார வேண்டும் என திமுக விவசாய அணி சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்தார். கூட்டத்தில் திமுக மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சென்னையநாயுடு ஆகியோர் தலைமையில் விவசாயிகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான படேதலாவ் ஏரி(பெரிய ஏரி) சுமார் 269 ஏக்கர் பரபரப்பளவில் அமைந்துள்ளது. மழை காலங்களில் இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பி, முழு கொள்ளளவை எட்டும்போது, கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் 9 ஊராட்சிகளும், பர்கூர் ஒன்றியத்தில் 11 ஊராட்சிகளும் என மொத்தம் 20 ஊராட்சிகளில் சுமார் 50 ஆயிரம் எக்டேர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.

இந்நிலையில், இந்த ஏரிக்கரையின் மேல் முட்செடிகள் வளர்ந்து பரந்து விரிந்துள்ளது. இதனால், ஏரிக்கரை பலவீனம் அடைந்துள்ளது. ஏரியின் மீது நொரம்பு மண் கொட்டப்பட்டு, அப்படியே குவியலாக உள்ளது. அதை யாரும் சமன்படுத்தவில்லை. இதேபோல், ஏரியில் இடது மற்றும் வலது புறம் அமைக்கப்பட்டுள்ள மதகுகள் மிகவும் பழுதடைந்துள்ளது. இந்த மதகின் வழியாக செல்லும் பாசன கால்வாய்கள் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால், மழை காலங்களில் தண்ணீர் செல்ல முடியாமல் உள்ளது. மேலும், ஏரியில் இருந்து பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஏரிகளுக்கு செல்லும் காலவாய் 7 கோடி செலவில் வெட்டப்பட்டது. இந்த கால்வாய் முழுவதும் செடி, கொடிகள் முளைத்தும், மரங்கள் வளர்ந்தும் காணப்படுகிறது. இதனால், தண்ணீர் கடைமடை வரையிலும் செல்வதற்கு மிகவும் தடையாக உள்ளது. எனவே, இந்த கால்வாயை தூர்வாரி, மரம், செடி, கொடிகளை அகற்றினால் தான் தண்ணீர் கடைகோடி வரை சென்றடையும். எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, ஏரி மற்றும் ஏரிக்கரையின் மேல் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றி, கரையை பலப்பத்த வேண்டும். மதகு மற்றும் கால்வாய்களை சரி செய்து பல விவசாயிகளின் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு நன்மை செய்யுமாறு விவசாயிகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு

1.50 லட்சம் தென்னங்கன்றுகள்கிருஷ்ணகிரி, அக்.1:கஜா புயலால் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களுக்கு கிருஷ்ணகிரியிலிருந்து 1.50 லட்சம் தென்னங்கன்றுகள் அனுப்பப்பட்டு வருவதாக வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்தார். ஓசூர் அதியமான் வேளாண் கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் அபிநயா, திவ்யா, ஹரிணி, இலக்கியா, சென்னம்மாள், கோமதி, அபிஸ்ரீ ஆகியோர் தொழில்நுட்ப பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் கிருஷ்ணகிரி தாலுகாவில் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அளவிலான திட்டங்கள் மற்றும் விவசாயிகளுடன் நேரடியாக கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தாலுகாவில் பயிரிடப்பட்டுள்ள நெல், சிறு தானியங்கள், எண்ணெய் வித்துப் பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் மற்றும் தென்னை சாகுபடி குறித்து இவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது.


நேற்று கிருஷ்ணகிரி அடுத்த பி.சி.புதூரில் உள்ள மாநில தென்னை நாற்றுப் பண்ணையில், தென்னை நாற்றுகள் குறிப்பாக குட்டை, நெட்டை-குட்டை, வீரிய ஒட்டு தென்னை நாற்று தேர்வு செய்தல், நாற்று உற்பத்தி செய்தல் குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் பச்சையப்பன் மற்றும் வேளாண்மை அலுவலர் சதீஷ் ஆகியோர் செயல்விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியின் போது பேசிய வேளாண்மை உதவி இயக்குநர், கடலோர மாவட்டங்களில் கஜா புயலால் தென்னை மரங்கள் ஏராளமாக விழுந்து நாசமானது. இந்த மரங்களுக்கு மாற்றாக இப்பண்ணையில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் தென்னை நாற்றுகள் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும், உள்ளூர் விவசாயிகள் அரசு நிர்ணயிக்கும் விலையான நெட்டை நாற்று 45, நெட்டை-குட்டை வீரிய ஒட்டு ரகம் 65க்கு தாலுகாவில் உள்ள அலுவலர்கள் மூலம் தென்னை நாற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

Tags : Batelalau ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு