×

காட்டுப்பன்றிகளை தடுக்க ஆமணக்கு செடிகள் வளர்ப்பு

தர்மபுரி, அக்.1: தர்மபுரி மாவட்டத்தில் விளைநிலத்தில் காட்டுப்பன்றிகள் நுழைவதை தடுக்க, ஆமணக்கு செடிகளை வளர்க்க ேவண்டும் என வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார். தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல், அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி மற்றும் மஞ்சவாடி ஆகிய வனச் சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, மான், மயில், காட்டுப்பன்றி, காட்டெருமை என பல்வேறு வகையான வன விலங்கினங்கள் உள்ளன. வனப்பகுதியில், தீவன வசதி கிடைக்காமல் காட்டுபன்றி அருகில் இருக்கும் விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். சமீபகாலமாக பென்னாகரம், பவளத்தூர், ஆதனூர், பளிச்செட்டிஅள்ளி, நல்லம்பள்ளி, தொப்பூர், புறவடை, பண்டஅள்ளி, கருபையனஅள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் வனப்பகுதி ஒட்டிய விளைநிலங்களில் காட்டுபன்றி புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. தற்போது நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர்.

நிலக்கடலை பயிர் வாசனைக்கு வனம் மற்றும் மலைக்குன்றுகளில் இருந்து காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து, பயிர்களை சேதப்படுத்தி செல்கிறது. இதனால் விவசாயிகளுக்கு  பல லட்சம் இழப்பு ஏற்படுகிறது. பயிர் சேதத்தை தவிர்க்க விவசாயிகள் தங்களுடைய பழைய துணிகளை, தோட்டத்தில் கட்டி பறக்கவிடுகின்றனர். இதை பார்த்து காட்டுப்பன்றி விளைநிலங்களுக்குள் வருவது குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வேளாண் அதிகாரி குணசேகரன் கூறுகையில், ‘காட்டுப்பன்றி தொல்லை மற்றும் பயிர்களை சேதப்படுத்தும் சுற்றுவட்டார பகுதியில் ஆமணக்கு செடி வளர்த்தால், காட்டுப்பன்றிகள் வருவதில்லை. ஒருகிலோ மீட்டர் தூரத்தில் வரும் காட்டு பன்றிகளுக்கு ஆமணக்கு வாசனை வந்தவுடன், விளைநிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்துவது தவிர்க்கப்படுகிறது,’ என்றார்.

Tags : castor plants ,
× RELATED கள்ளிக்குடி பகுதியில் மக்காச்சோளத்தை...