×

ஈரோட்டில் அதிமுக., பிரமுகரின் மினரல் வாட்டர் நிறுவனத்திற்கு சீல்

ஈரோடு,  அக். 1: அதிமுக எம்எல்ஏ தூண்டுதலின் பேரில், மினரல் வாட்டர் நிறுவனத்துக்கு சீல் வைத்துள்ளதாக, நிறுவனத்தின் உரிமையாளரான அதிமுக பிரமுகர் குற்றம் சாட்டினார். ஈரோடு அருகே வீரப்பம்பாளையம் பைபாஸ்  ரோட்டில் ஸ்ரீகாந்தி என்பவருக்கு சொந்தமான மினரல் வாட்டர் நிறுவனம்  உள்ளது. காந்தி அதிமுக.,வில் வீரப்பன்சத்திரம் நகர விவசாய பிரிவு  செயலாளராக இருந்துள்ளார். இவரது வாட்டர் நிறுவனத்தில் இருந்து உரிய அனுமதி  பெறாமல் வணிக மின் இணைப்பு பெற்று அதிக அளவில் தண்ணீர் எடுத்து மினரல்  வாட்டர் கேன்கள் விற்பனை செய்வதாகவும், இதனால் அப்பகுதியில் நிலத்தடி  நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக கூறி நேற்று மாநகராட்சி உதவி ஆணையர்கள்  அசோக்குமார், விஜயா மற்றும் தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான  அதிகாரிகள் குழுவினர் ஸ்ரீகாந்திக்கு சொந்தமான மினரல் நிறுவனத்தில் சோதனை  நடத்தினர். அப்போது ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் ஸ்ரீகாந்தி தன்னிடம்  இருந்த ஆவணங்களை காட்டியுள்ளார். இதனை தொடர்ந்து அதிகாரிகள் மினரல்  வாட்டர் நிறுவனத்தில் சோதனை நடத்தினர். உரிய அனுமதி இன்றி தண்ணீரை எடுத்து  விற்பனை செய்வதாக கூறி மினரல் வாட்டர் கம்பெனிக்கு சீல் வைப்பதாக  அதிகாரிகள் கூறினர்.

இதனால் சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து  நிறுவனத்தில் இருந்து வெளியே வர காந்தி மறுத்தார். மேலும் தரையில்  அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அதிகாரிகளுக்கும்,  காந்திக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து  பாதுகாப்பு பணியில் இருந்த வீரப்பன்சத்திரம் போலீசார் ஸ்ரீகாந்தியை  குண்டுகட்டாக வெளியேற்றி விட்டு நிறுவனத்துக்கு சீல் வைத்தனர். மேலும் மின்  இணைப்புகளையும் துண்டித்தனர். இதுகுறித்து காந்தி கூறியதாவது:  அதிமுக முன்னாள் கவுன்சிலர் இளங்கோ பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தை  ஆக்கிரமிப்பு செய்து கிணறு வைத்துள்ளார். அந்த கிணற்றிற்கு தேவையான தண்ணீரை  கொப்பு வாய்க்காலை ஓட்டை போட்டு தண்ணீரை எடுத்து வருகிறார். மேலும் இவரது  தோட்டத்திற்கு ரோடு போட முயற்சி செய்து வருகிறார்.

இதற்கு அதிமுக  எம்.எல்.ஏ.ராமலிங்கம் உடந்தையாக இருக்கிறார். இப்பிரச்னை தொடர்பாக நாங்கள்  விவசாயிகள் சேர்ந்து ஈரோடு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். கடந்த 9ம்  தேதி அதிமுக எம்.எல்.ஏ. ராமலிங்கம் அவரது அலுவலகத்துக்கு என்னை அழைத்து  இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும், முன்னாள் கவுன்சிலர் இளங்கோவை சமாதானம்  செய்ய வேண்டும் என கூறினார். ஆனால் நான் இதற்கு உடன்பாடாததால் அதிகாரிகளை தூண்டிவிட்டு மினரல் வாட்டர் நிறுவனத்துக்கு சீல் வைத்துள்ளார். இதை நான்  சட்டப்படி எதிர்கொள்வேன். நானும் அதிமுகவை சேர்ந்தவன் தான். அதிமுக  ஆட்சியில் அதிகாரிகளை தூண்டிவிட்டு எம்.எல்.ஏ. ராமலிங்கம் பழிவாங்கி  வருகிறார். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Eminent's Mineral Water Company ,Erode ,
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!