×

காங்கயம் அருகே மண் கடத்திய லாரி சிறைபிடிப்பு

காங்கயம், அக்.1: காங்கயம் தாலுகா, படியூர், சிவன்மலை, கணபதிபாளையம் ஊராட்சி பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் படியூரைச் சேர்ந்த மண் கடத்தல் கும்பல், குறைந்த விலைக்கு மண்ணை வாங்கி, அதிலிருந்து சட்டவிரோதமாக மணல் மற்றும் கிராவல் மண்ணை எடுத்து, அதிக விலைக்கு விற்று வருகின்றனர். கனிம வளத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரை, மண் கடத்தல் மாபியாக்கள் பணம் கொடுத்து சரிசெய்துவிடுவதால், கிராவல் மண், கடத்தல் தடையில்லாமல் நடக்கிறது. இது போல இப்பகுதியில் கடந்த ஆறு மாத காலமாக தினமும் 1000 லோடு மண் எடுத்துச் செல்லப்படுகிறது.

படியூர் பகுதியில் 5 ஏக்கர் பரப்பில் 10 அடிக்கும் மேலாக தோண்டி அரசு அனுமதியில்லாமல் தொடர்நது மண் எடுத்து விற்பனை செய்யப்படுகிறது. இது போல சிவன்மலை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு அனுமதியை தவறாக பயன்படுத்தி 7 ஏக்கர் பரப்பில் 12 அடி ஆழத்திற்கு மண் எடுக்கப்பட்டு வருகிறது. விவசாய நிலங்களில் 3 அடி ஆழத்திற்கு மேல் மண் எடுக்க கூடாது என அரசு சட்டம் உள்ளது. ஆனால் இப்பகுதியில் போலீயான பர்மிட் மூலம் 15 அடி ஆழம் வரை சட்ட விதிமுறை மீறி மண் எடுத்து விற்பனை நடப்பதாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கும் மனு அளித்துள்ளனர். ஆனால் இது குறித்து வருவாய்த்துறை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதி பொதுமக்கள் மண் எடுக்க சென்ற லாரிகளை ஒட்டபாளையம் கிராம பகுதியில் சிறை பிடித்தனார்.

இது குறித்து காங்கேயம் தாசில்தார் புனிதவதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆர்.ஐ மற்றும் வி.ஏ.ஓ., வை அனுப்பி வைப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார். ஆனால் ஒரு மணிநேரம் ஆகியும் வருவாய்துறையினர் அப்பகுதிக்கு செல்லவில்லை. இதையடுத்து சிறை பிடிக்கப்பட்ட லாரிகளை பொதுமக்கள் தாமாகவே விடுவித்தனர்.  இது குறித்து காங்கயம் தாசில்தார் புனிதவதி கூறுகையில், ‘‘மண் எடுத்த லாரியை சிறை பிடித்து வைத்திருந்தது குறித்து தகவல் கிடைத்தது. ஆர்.ஐ., அனுப்பி வைத்தேன். ஆனால் அங்கு லாரி இல்லை. மண் எடுக்கும் பகுதியில் புகார் வந்த பகுதியில் இதுவரை ஆய்வு ஏதும் செய்யவில்லை. நான் சமீபத்தில் தான் பணிக்கு வந்தேன்,’’ என்றார்.

Tags : Kangayam ,
× RELATED மருதுறை ஊராட்சியில் குடிநீர் குழாய்,...