×

தூதூர்மட்டம் மகாலிங்கா காலனியில் அடிப்படை வசதி கோரி மக்கள் நூதன போராட்டம்

ஊட்டி, அக். 1: தூதூர்மட்டம் அருகேயுள்ள மகாலிங்கா காலனி பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரி  கலெக்டர் அலுவலகம் முன் பச்சிளம் குழந்தைகளை தரையில் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். குன்னூர் தாலூகாவிற்குட்பட்ட தூதூர்மட்டம் அருகே மகாலிங்கா காலனி உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலான மக்கள் கூலித் தொழிலாளர்கள். இவர்கள் அனைத்து ேதவைகளுக்கும் தூதூர்மட்டம் பஜார் பகுதிக்கு வர ஒரு வழித்தடம் தான் உள்ளது. அந்த வழித்தடம் அருகே வீடு கட்டியுள்ள தனியார் ஒருவர், நடைபாைதயை மறித்து தடுப்பு சுவர் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இப்பகுதி மக்கள் தங்களது கிராமத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அதிகாரிகளை கொண்டு அந்த தடுப்பு சுவர் கடந்த சில நாட்களுக்கு முன் அகற்றப்பட்டது. தொடர்ந்து அந்த நடைபாதையை பயன்படுத்த சம்பந்தப்பட்ட நபர் மகாலிங்கா நகர் பகுதி மக்களை விடாமல் தடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அதேேபால் மகாலிங்கா நகர் பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு உள்ள தண்ணீர் தொட்டியில் மூடி இல்லாததால் வன விலங்குகள் விழுந்து உயிரிழக்கும் சம்பவம் தொடர்வதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த கிராமத்தில் இருந்து மயானத்திற்கு இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல நடைபாதை வசதியும், உடல்களை அடக்கம் செய்ய
போதுமான மயான வசதியும் இல்லாத நிலைஉள்ளது. இதுகுறித்து பல முறை குன்னூர் தாசில்தார் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், நேற்று மகாலிங்கா நகர் பகுதி மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆதார், ரேஷன் கார்டுகளை கலெக்டரிடம் ஒப்படைப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கலெக்டரை சந்திக்க சென்ற போது அதிகாரிகள் முறையாக பதில் அளிக்கவில்லை எனக் கூறி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பச்சிளம் குழந்தைகளை தரையில் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டர்களிடம் டிஎஸ்பி., சரவணன் தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், பொதுமக்கள் கலெக்டரை சந்திக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி தரையில் அமர்ந்து ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பின் குன்னூர் தாசில்தார் தினேஷ்குமார் தலைமையில் மீண்டும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : Mahalinga ,
× RELATED நிலுவை தொகை வழங்காததால் பாலகொலா...