×

குந்தா அணை நிரம்பியதால் உபரிநீர் வெளியேற்றம்

மஞ்சூர், அக்.1:மாவட்டத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ மழை பெய்ததால் குந்தா அணை மீண்டும் நிரம்பியதை தொடர்ந்து 2 மணிநேரம் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் 13 நீர்மின் நிலையங்கள் உள்ளது. இந்த அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் மூலம் மின் நிலையங்கள் இயக்கப்பட்டு 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு குந்தா பகுதியில் விடிய, விடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகப்பட்சமாக 10 செ.மீ மழை பெய்ததால் நீர் வரத்து அதிகரித்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு குந்தா அணை நிரம்பியது. தொடர்ந்து பாதுகாப்பு கருதி அணை திறந்துவிடப்பட்டது.

வினாடிக்கு 500கன அடிநீர் வெளியேற்றபடுகிறது. தொடர்ந்து 3 மணிநேரம் தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் மழையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டு அணை மூடப்பட்டது. இதேபோல் மஞ்சூர் அருகே உள்ள அப்பர்பவானி, அவலாஞ்சி, கெத்தை உள்ளிட்ட அணைகளிலும் நீர்மட்டம் பெருமளவு உயர்ந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை அளவு வருமாறு, குந்தா-107 மி.மீ, அவலாஞ்சி-83 மி.மீ, எமரால்டு-64 மி.மீ, கெத்தை- 36 மி.மீ, பார்ஸன்ஸ்வேலி-27 மி.மீ, மோயார்-18 மி.மீ, போர்த்திமந்து, அப்பர்பவானி தலா 10 மி.மீ, மரவகண்டி-7 மி.மீ, கிளன்மார்கன்-6 மி.மீ, சிங்காரா-5 மி.மீ, சாண்டிநல்லா, பைக்காரா தலா 3 மி.மீ, பரளி-1 மி.மீ மழை பதிவானது.

Tags : Kunda Dam ,
× RELATED குந்தா அணையில் சேறு, சகதிகளை அகற்ற நடவடிக்கை