×

2 கிராமங்களில் ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு தோகைமலையில் நடக்கவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் வாபஸ் அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு

தோகைமலை, அக். 1: 2 கிராமங்களில் ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதை கண்டித்து தோகைமலையில் இன்று நடக்கவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வாபஸ் பெறப்பட்டது.கரூர் மாவட்டம் தோகைமலை அருகே சின்னையம்பாளையம் ஊராட்சியில் உள்ள பெத்தாநாயக்கனூர் மற்றும் கெல்லமநாயக்கனூர் ஆகிய 2 கிராமங்களில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த இரு கிராம மக்களுக்கு ஒரு மாதமாக குடிநீர் கிடைக்காத நிலையில் ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து தோகைமலையில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்து இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் இரு கிராம மக்களையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஓன்றிய அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு ஒன்றிய ஆணையர் (கிராம வளர்ச்சி) ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய உதவி பொறியாளர் லட்சுமணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், முன்னாள் கவுன்சிலர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது கிராம மக்கள் தெரிவித்ததாவது: பெத்தாநாயக்கனூர் மற்றும் கெல்லமநாயக்கனூர் ஆகிய 2 கிராமங்களிலும் 6 மாதங்களாக அடிக்கடி குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது.சில நாட்கள் வெந்தபட்டியில் உள்ள போர்வெல் மூலம் குடிநீர் வழங்கி வந்தனர். இதுவும் சில நாட்கள் கழித்து நின்றது. பின்னர் ஊராட்சி மன்ற அலுவலகம் சார்பில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதுவும் சில நாட்களுக்கு பிறகு நிறுத்தப்பட்டது.

இதனால் எங்கள் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. குடிநீர் இல்லாமல் பொதுமக்களும், கால்நடைகளும் அவதிப்பட்டு வந்த நிலை குறித்து ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திற்கு நேரிலும், கோரிக்கை மனுக்களாக அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தோம் என்று தெரிவித்தனர்.இதனை கேட்டறிந்த ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் 2019-2020ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய போர்வெல் அமைத்து பைப்லைன் மூலம் 7.5 எச்.பி புதிய மின் மோட்டார் பொருத்தப்பட்டு ஒருவார காலத்துக்குள் 2 கிராமங்களுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் இன்று நடத்தவிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை வாபஸ் பெற்று கொண்டனர்.

Tags : negotiations ,protests ,villages ,
× RELATED லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த காட்டு யானை