×

சிவாயம் ஊராட்சி குப்பாச்சிபட்டி பெரிய பாலத்தில் புதிதாக அமைத்த தார் சாலையில் 4 மாதத்தில் விரிசல் விட்ட அவலம்

தோகைமலை, அக். 1: கரூர் மாவட்டம் அய்யர்மலை அருகே கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவாயம் ஊராட்சி குப்பாச்சிபட்டி பகுதியில் குளித்தலை- மணப்பாறை மெயின் ரோட்டின் குறுக்கே பாப்பக்காபட்டி பெரியகுளத்தின் ஆற்றுவாரி செல்கிறது. பெரியகுளத்தின் ஆற்றுவாரி சிவாயம் குளத்திற்கு செல்வதால் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் பருவமழையின் போது பாப்பக்காபட்டி பெரியகுளத்தில் இருந்து சிவாயம் குளத்திற்கு அதிகமாக தண்ணீர் செல்வதால் பாலம் போதுமானதாக இல்லாமல் இருந்து உள்ளது. இதனால் குப்பாச்சிபட்டி அருகே பாப்பக்காபட்டி பெரியகுளத்தின் ஆற்றுவாரி செல்லும் இடத்தில் பெரிய பாலம் அமைக்கப்பட்டது.மேலும் குளித்தலை- மணப்பாறை மெயின்ரோட்டில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்வதால் பாலம் அகலப்படுத்தப்பட்டது. தொடர்நது பாலத்தின் பக்கவாட்டில் உயரமான கரைகள் இருந்ததால் வாகன விபத்துகளை தடுக்க பாலத்தை ஒட்டி உள்ள கரை பகுதிகளில் சுமார் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் மற்றும் சாலையை அகலப்படுத்தும் பணிகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடந்தது. ஆனால் தடுப்பு சுவர் அமைக்கப்பட்ட பின்பு தற்போது மழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதனால் 4 மாதத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையும், தடுப்புசுவரும் பழுதாகி உள்ளதால் குறுகிய காலத்திலேயே பழுதாகி முற்றிலும் சேதமாகும் நிலையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.அதிகாரிகளின் அலட்சியத்தால் குப்பாச்சிபட்டி பெரிய பாலத்தில் தரமில்லாமல் தடுப்பு சுவரும் சாலையும் அமைத்ததால் தற்போது விரிசல் ஏற்பட்டு 2 அடி பள்ளம் ஏற்பட்டு உள்ளது என்று வேதனை தெரிவித்து உள்ளனர்.ஆகவே குப்பாச்சிபட்டி பெரிய பாலத்தில் அமைக்கப்பட்ட புதிய தடுப்புசுவர் மற்றும் புதிய சாலை தரமாக உள்ளதா என்று மறு ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags : Sivayam Urukshi ,bridge ,tar road ,
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!