×

ரஞ்சன்குடி கோட்டையில் பள்ளி மாணவர்கள் தூய்மை பணி

பெரம்பலூர், அக். 1: வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சன்குடி கோட்டையில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பள்ளி மாணவ மாணவியர் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா தேவையூர் ஊராட்சிக்கு உட்பட்டது ரஞ்சன்குடி கிராமம். பெரம்பலூரில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரஞ்சன்குடியில் கிபி 16ம் நூற்றாண்டின் இறுதியில் கற்பாறையின் மீது கட்டப்பட்ட ரஞ்சன்குடி கோட்டை எனப்படும் பிரமாண்ட கோட்டை உள்ளது. 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோட்டையில் இன்றளவும் விதான மண்டபம், கொடிமேடை, தண்டனை கிணறு, அகழி, கடல் மட்டத்திலிருந்து 152 அடி உயரத்தில் கோட்டையின் உச்சியில் உள்ள குளம் என வரலாற்று எச்சங்கள் இன்றளவும் அழியாத சாட்சிகளாக உள்ளன.கிபி 17ம் நூற்றாண்டில் முகமது அலி- ஆங்கிலேயர் கூட்டு படைக்கும், சந்தாசாஹிப் - பிரெஞ்சு கூட்டு படைக்கும் இடையே நடந்த வால்கொண்டா போர் இந்த கோட்டையை மையமாக வைத்து தான் நடந்தது என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோட்டை பெரம்பலூர் மாவட்ட சுற்றுலா தலங்களில் முதன்மையானது.இந்திய தொல்லியல் துறை சார்பில் தஞ்சை உபகோட்ட முதுநிலை பராமரிப்பு அலுவலர் சங்கர் அறிவுறுத்தலின்பேரில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், தாராசுரம் சிவன் கோயில், பெரம்பலூர் ரஞ்சன்குடி கோட்டை ஆகியவற்றில் கடந்த 16ம் தேதி முதல் 30ம் தேதி வரை பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தூய்மைப்படுத்தும் திட்டம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்படி இறுதி நாளான நேற்று ரஞ்சன்குடி கோட்டை வளாகம் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி இந்திய தொல்லியல் துறையின் தஞ்சை உபகோட்ட உதவி பராமரிப்பு அலுவலர் சீத்தாராமன் தலைமையில், ரஞ்சன்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்பரசு முன்னிலையில் பள்ளி மாணவ, மாணவியரால் நேற்று நடந்தது.
இதில் பள்ளி மாணவ, மாணவியர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோட்டையின் நுழைவுவாயில், உட்புறம், மேல்தளம், கோட்டை வளாகம், உள்ளிருக்கும் மசூதி, குளம் ஆகிய பகுதிகளில் கிடந்த குப்பைகளை, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தினர். நிகழ்ச்சியின்போது பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் ஐயப்பன், கோவிந்தசாமி மற்றும் தொல்லியல்துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள கோட்டை காவலாளிகள் உடனிருந்தனர்.

Tags : school children ,Ranjangudi fort ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...