×

குறு சிறு தொழில் நிறுவனங்கள் சர்வதேச தர சான்றிதழ் பெற சிறப்பு மானிய திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர், அக். 1: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சர்வதேச தர சான்றிதழ் பெற சிறப்பு மானிய திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்திருப்பதாவது: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சர்வதேச தரச்சான்றிதழ் பெற சிறப்பு மானிய திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் சர்வதேச போட்டி தன்மையை மேம்படுத்தவும், உலகளாவிய சந்தையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு ஏதுவாக இந்நிறுவனங்கள் சர்வதேச தர சான்றிதழ் பெற ஏற்படும் செலவு தொகையில் ஒவ்வொரு சான்றிதழுக்கும் 100 சதவீதம் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை ஈடு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்நிறுவனங்கள் சான்றிதழ் அமைப்புகளுக்கான தேசிய அங்கீகார வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் மூலமாக சர்வதேச தர சான்று பெற்றிறுத்தல் அவசியம். தர நிர்ணய சான்றிதழ் பெற்ற நாளிலிருந்து ஓராண்டுக்குள் இந்த அலுவலகத்தில் மானியத்தை பெற விண்ணப்பிக்க வேண்டும்.  ஒன்றுக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ள தொழில் நிறுவனங்கள் ஒவ்வொரு கிளைக்கும் தனித்தனியாக மானியம் பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பெரம்பலூரை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : enterprises ,
× RELATED ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கை,...