×

வண்டலூர், கண்டிகை பஸ் நிறுத்தத்தில் சாலையை ஆக்கிரமித்து மணிக்கணக்கில் நிறுத்தப்படும் தனியார் வாகனங்கள்

கூடுவாஞ்சேரி, அக்.1: வண்டலூர், கண்டிகை பஸ் நிறுத்தங்களில் மணிக்கணக்கில் தனியார் வேன்கள் நிறுத்தப்படுகின்றன. இதனை கண்டுகொள்ளாத அதிகாரிகளால், வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. கூடுவாஞ்சேரி அருகே வண்டலூரில் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், பறவைகளும் ஏராளமாக உள்ளன. இதனை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இதில், அரசு பஸ்களில் செல்ல பூங்கா அருகில் உள்ள வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை வளைவில் 100க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து நிற்பது வழக்கம். இங்கு, பயணிகளை ஏற்றி செல்ல அரசு பஸ்களுடன் போட்டி போட்டுக்கொண்டு, 30க்கும் மேற்பட்ட தனியார் வேன்கள் நிறுத்தப்படுகின்றன.

இதனால், அரசு பஸ் டிரைவர்களுக்கும், தனியார் வேன் டிரைவர்களுக்கும் அடிக்கடி வீண் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதேபோல், கண்டிகை பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதிலேயே குறிக்கோளாக உள்ள வேன் டிரைவர்கள், சாலையிலேயே மணிக்கணக்கில் வேன்களை நிறுத்துகின்றனர்.
இதனால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அவசர ஆபத்துக்காக செல்லும் ஆம்புலன்சுகளுக்கும் வழி இல்லாத நிலை ஏற்படுகிறது. பூங்காவுக்கு வரும் வாகனங்களுக்கு வழிவிடுவதில்லை. இதையொட்டி, கடும் போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்து ஏற்படுகிறது.
இதுபோல் காலை, மாலை நேரங்களில் சாலையின் நடுவில் வேன்களை நிறுத்துவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவ, மாணவிகள், அன்றாடம் அலுவலக பணிகளுக்கு செல்லும் ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதற்கு, சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

Tags : road ,bus stop ,Kandy ,Vandalur ,
× RELATED ஈரோட்டில் குறைந்த கட்டணத்தில் உடனடி...