×

திருவள்ளூர் மேற்கு, கிழக்கு, காஞ்சி வடக்கில் 476 டாஸ்மாக் கடைகளில் 414 பார் ஏலம் : 62 ஏலம் எடுக்க ஆட்கள் இல்லை

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு, கிழக்கு, காஞ்சிபுரம் வடக்கு பகுதிகளில் உள்ள 476 டாஸ்மாக் கடைகளின் ‘’பார்’’களுக்கு,  ஏலம் விடப்பட்டது. இதில், 414 பார்கள் ஏலம் போனது. மற்ற 62 கடைகளுக்கு பார் ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் மேற்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில், திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை ஆகிய தாலூகாவிற்கு உட்பட்டு 126 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதேபோல் திருமழிசை சிப்காட் பகுதியில் உள்ள கிழக்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு உட்பட்டு, 218 டாஸ்மாக் கடைகள், காஞ்சிபுரம் வடக்கு பகுதிகளில் உள்ள தாம்பரம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், பெரும்புதூர் ஆகிய தாலுகாக்களுக்கு உட்பட்டு 132 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

மேற்கண்ட, 476 டாஸ்மாக் கடைகளுக்கான பார் ஏலம் நேற்று நடைபெற்றது.  பிற்பகல் 3 மணி வரை மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து,  மாலை 3 மணிக்கு பிறகு டெண்டர் பெட்டிகள் திறக்கப்பட்டது. இதில், திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள 126 கடைகளில், 69 கடைகளுக்கும், திருமழிசையில் உள்ள கிழக்கு மாவட்டத்தில் 218 கடைகளில் 214 கடைகளுக்கும், காஞ்சி வடக்கு மாவட்டத்தில் 132 கடைகளில் 131 கடைகளுக்கும் பார் ஏலம் போனது. மற்ற 62 டாஸ்மாக் கடைகளுக்கு பார்  ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.

அனுமதியின்றி நடத்துவதில் சிக்கல்: திருவள்ளூர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் அருகே அனுமதியின்றி பார்கள் இயங்கிவந்தது. இவர்கள், ஆளும் கட்சியினர் என்பதால் உள்ளூர் மற்றும் மதுவிலக்கு போலீசார் கண்டும், காணாமல் இருந்தனர். கணக்குக்காக, அவ்வப்போது போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று சிறு வழக்கு பதிந்து போலீஸ் நிலைய பெயிலில் அனுப்பி வந்தனர். இத்தகைய முறைகேடான செயல்களால் கடந்த ஆண்டு அரசுக்கு பல கோடி வரை அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது, 476 கடைகளில், 414 கடைகளுக்கு பார்கள் ஏலம் போனதால், ஆளும் கட்சியினர் அனுமதியின்றி பார் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags : Bar Auction ,bidders ,
× RELATED திருப்பூரில் பார் ஏலம் விடுவதில்...