×

அடிப்படை வசதியற்ற அங்கன்வாடி மையங்கள் : குழந்தைகள் அவதி

ஆவடி, அக்.1:  ஆவடி, காமராஜர் நகர் மெயின் ரோட்டில் உள்ள மாநகராட்சி மருத்துவமனை வளாகத்தில் நந்தவனமேட்டூர், பஜார் நகர் ஆகிய பகுதிகளுக்கு  அங்கன்வாடி மையம் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இதில் தலா 20 குழந்தைகள் உள்ளன. இந்த மையம் முறையே 2004, 2013 ஆகிய ஆண்டுகளில் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேற்கண்ட இரண்டு மையத்தில் குழந்தைகளுக்கு  குடிநீர், கழிப்பறை வசதி கிடையாது. இதனால், குழந்தைகள் மாநகராட்சி மருத்துவமனை வளாகத்திலேயே சிறுநீர், மலம் கழிக்கின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. கட்டிடங்களை முறையாக பராமரிக்காததால் மேற்கூரையில் இருந்து மழை காலத்தில் தண்ணீர் ஒழுகுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மழைக்காலங்களில் குழந்தைகளை அமரவைத்து கல்வி கற்றுக்கொடுக்க முடியவில்லை. மேலும், மையத்தில் ஜன்னல்கள் உடைந்துகிடக்கின்றன. இதனால், காற்றுடன் கூடிய மழை பெய்யும் போது சாரல் தண்ணீர் உள்ளே விழுகிறது. இதனையடுத்து மையத்தில் வைத்துள்ள உணவு பொருட்களும், புத்தகங்களும் மழையில்  நனைந்து வீணாகின்றன. மேலும், மையங்களில் உள்ள மின்விளக்குகள் சரிவர எரிவது இல்லை. இதனால் பகல் நேரத்திலேயே மையம் இருள்சூழ்ந்து கிடக்கின்றன. மேற்கண்ட பல்வேறு பிரச்சனைகளால், குழந்தைகளை பெற்றோர்கள் அச்சத்துடன் தான் இரு மையங்களுக்கு அனுப்புகின்றனர். ஆவடி, காமராஜர் நகர் மெயின் ரோடு மருத்துவமனை வளாகத்தில் உள்ள நந்தவனமேட்டூர், பஜார் நகர் ஆகிய இரு அங்கன்வாடி மையங்களிலும் அடிப்படை வசதிகளை செய்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோரிக்கை வைத்துள்ளனர்.   

Tags : Anganwadi Centers: Basic Aid ,
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...