×

திருமழிசை துணைக்கோள் நகர திட்டத்தில் முதற்கட்டமாக 3,710 வீடுகள் கட்ட முடிவு : துணை முதல்வர் ஓபிஎஸ் தகவல்

திருவள்ளூர்: தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரியத்தால் செயல்படுத்தப்படும் திருமழிசை துணைக்கோள் நகரத் திட்டத்தினை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருவள்ளுர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த குத்தம்பாக்கம், பர்வதராஜபுரம், செம்பரம்பாக்கம், நரசிங்கபுரம், வெள்ளவேடு ஆகிய 5 கிராமங்களில் அடங்கிய 1694.98 ஏக்கர் நிலங்கள் திருமழிசை துணைக்கோள் நகரம் அமைக்க தேர்வு செய்யப்பட்டு, அதில் 466.49 ஏக்கர் நிலங்களுக்கு தீர்வாணை பெறப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட 466.49 ஏக்கர் நிலங்களில், 310.42 ஏக்கர் நிலங்கள் வீட்டுவசதி வாரியம் மூலம் பெறப்பட்டது. அதேபோல் 12.65 ஏக்கர் அரசு நிலங்கள், வாரியத்திற்கு நில உரிமை மாற்றம் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. முதற்கட்டமாக பகுதி-1 துணைக்கோள் நகரத் திட்டத்தினை குத்தம்பாக்கம், செம்பரம்பாக்கம் மற்றும் பர்வதராஜபுரம் ஆகிய மூன்று கிராமங்களில் ஒப்படைப்பு செய்யப்பட்ட 121.07 ஏக்கர் நிலங்களுடன் சில அரசு புறம்போக்கு நிலங்களையும் சேர்த்து மொத்தம் 122.99 ஏக்கர் நிலங்களில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

துணைக்கோள் நகரம் பகுதி -1 திட்டத்திற்கான உட்பிரிவு மனை வரைபடமானது 7 தொகுப்புகள் கொண்ட பன்னடக்கு மாடி குடியிருப்புகளாகவும், ஒரு தொகுப்பு பன்னடக்கு வணிக வளாகமாகவும் தயாரிக்கப்பட்டு, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மனை மேம்பாட்டு திட்டப்பணிகள் மேற்கொள்ள ரூ.245.70 கோடி மதிப்பீட்டில் வாரியத்தின் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் 17.02.2016 அன்று துவங்கி, 31.12.2018ல் முடிக்கப்பட்டுவிட்டது. தாழ்வான பகுதிகளில் மண் நிரப்பும் பணி, 3.75 கி.மீட்டர் தடுப்பு சுவர், 0.09 கி.மீட்டர் பாலம், 3.82 கி.மீட்டர் சாலை மற்றும் வடிகால் வாய்க்கால், 240 தெரு விளக்குகள், 20 ஆழ்துளை கிணறுகள், 8 கீழ்நிலை நீர் தேக்க தொட்டிகள், 2 கழிவு நீர் சேகரிப்பு தொட்டிகள் மற்றும் 3.48 கி.மீட்டர் பாதாள கழிவு நீர் குழாய்கள் ஆகியவை மனை மேம்பாட்டு பணிகள் ஆகும்.

இங்கு, 9,513 வீடுகளின் திட்டப்பணிகள் நான்கு கட்டமாக கட்டப்படவுள்ளது. முதற்கட்டமாக 3,710 வீடுகள், இரண்டாவது கட்டமாக 3,516 வீடுகள், மூன்றாம் கட்டமாக 2,217 வீடுகள், நான்காம் கட்டமாக வணிக வளாகம் கட்ட உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு துணை முதல்வர் கூறினார். ஆய்வின்போது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மேலாண்மை இயக்குநர் ஆனந்தராவ் விஷ்ணு பாட்டில், டி.கார்த்திகேயன், திருவள்ளுர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : houses ,phase ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...